வேலூர்: கடந்த பத்து நாள்களுக்கும் மேலாக வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த மழை பாதிப்பில் இருந்து பாதுகாப்பாக இருப்பதற்காக அடைக்கலம் நாடிச் சென்ற ஒன்பது பேர், அவர்கள் தங்கியிருந்த மாடி வீடு இடிந்து விழுந்ததில் தூக்கத்திலேயே உயிரிழந்தனர்.
வேலூர் மாவட்டம், பேரணாம் பட்டில் உள்ள மசூதி தெருவில் வசித்து வரும் ஒரு குடும்பத்தினர் கனமழை, காட்டாற்று வெள்ளம் காரணமாக பாதுகாப்பிற்காக தாங்கள் எப்போதும் போல் வழக்க மாகத் தங்கும் பர்கூஸ் என்பவரது வீட்டுக்குச் சென்று தங்கியுள்ளனர்.
மொத்தமாக நேற்று முன்தினம் இரவு இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 18 பேர் அந்த வீட்டில் படுத்துறங்கிய நிலையில், நேற்று காலை 6.30 மணியளவில் அனீஷா பேகத்தின், 63, வீடு சரிந்து விழுந்து தரைமட்டமானது.
இந்த விபத்தின்போது அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த நான்கு குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட ஒன்பது பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அங்கிருந்து காயத்துடன் மீட்கப்பட்ட ஒன்பது பேர் பேரணாம்பட்டு, வேலூர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
சம்பவ இடத்தை வேலூர் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் பார்வையிட்டார்.
நகராட்சி நிர்வாகம், வருவாய்த்துறை, காவல்துறையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். பொக்லைன் இயந்திரம் மூலம் இடிபாடுகள் அகற்றப்பட்டு சடலங்கள் மீட்கப்பட்டன.
கனமழையால் உயிர்ச்சேதம் ஏதும் பெரியளவில் எற்படாமல் இருந்து வந்த நிலையில், இந்தச் சம்பவம் அங்குள்ள மக்களைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
விபத்தில் உயிரிழந்த ஒன்பது பேரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது தமிழக அரசு.

