செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
cc6442d7-6942-4849-b137-47c3e87227a3
-
multi-img1 of 2

பிரபல எழுத்தாளர் கோவி. மணிசேகரன் காலமானார்

வேலூர்: சென்னை கே.கே. நகரில் வசித்து வந்த பிரபல எழுத்தாளரும் இயக்குநருமான கோவி. மணிசேகரன், 95, வயது முதிர்வின் காரணமாக நேற்று காலமானார். அவருக்கு சரஸ்வதி என்ற மனைவி, ஐந்து மகள்கள், மூன்று மகன்கள் உள்ளனர்.

95 சரித்திர நாவல்கள், 47 சமூக நாவல்கள், 5 நாடக நூல்கள், 2 மொழிபெயர்ப்பு நூல்கள், 10 கவிதை நூல்களுடன் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் இவர் எழுதியுள்ளார். 'குற்றாலக் குறிஞ்சி' என்ற நூலுக்கு 1992ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது இவருக்கு கிடைத்தது. கோவி. மணிசேகரன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின், தலைவர்கள், இலக்கியப் பிரமுகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய தமிழகம் வருகிறது மத்திய குழு

சென்னை: மழை, வெள்ளச் சேதங்களை ஆய்வு செய்வதற்காக நாளை ஞாயிறன்று எழுவர் கொண்ட மத்திய குழுவினர் தமிழகம் வரவுள்ளனர்.

தமிழகத்தில் பெய்த கனமழை காரணமாக விளை நிலங்கள், சாலைகள், வீடுகள் போன்றவை வெகுவாக சேதமடைந்துள்ளன. மாடு கன்றுகளும் உயிரிழந்துள்ளன. இந்நிலையில், மத்திய உள்துறை இணைச் செயலாளர் ராஜிவ் சர்மா தலைமையில் தமிழகம் வரும் குழுவினரில் விவசாயம், உழவர் நலன், நிதி, நீர்வளம், மின்சாரம், சாலைப் போக்குவரத்து, ஊரக வளர்ச்சி ஆகிய ஏழு முக்கியத் துறைகளைச் சேர்ந்தவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

மின்சாரம் பாய்ந்து மாடு, கன்றுகள் உயிரிழப்பு

மேடவாக்கத்தில் தேங்கியிருந்த மழைநீரில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த மாடுகள். படம்: தமிழக ஊடகம்

மேடவாக்கம்: மேடவாக்கத்தைச் சேர்ந்தவர் கேசவன், 80. இவர் இந்த மாடுகளை வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறார். நேற்று காலை மேய்ச்சலுக்கு சென்ற மாடுகள் மதிய நேரத்தில் வீடு திரும்பியபோது சாலையில் மழைநீர் தேங்கியிருந்தது. அதில் மின்சாரக் கம்பி அறுந்து விழுந்துள்ளது. அந்தப் பகுதியைக் கடந்து செல்ல முயன்ற இரு பசு மாடுகள், இரு கன்றுகள், ஓர் எருமை மாடு மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவை உயிரிழந்துள்ளன. உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேடவாக்கம் தீயணைப்புத் துறையினர் மாடுகளை ஜேசிபி இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தினர்.

இரு கட்டங்களாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்

சென்னை: தமிழகத்தில் இரு கட்டங்களாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த மாநிலத் தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. பேரூராட்சிக்கு தனியாகவும் நகராட்சி, மாநகராட்சிக்கு தனியாகவும் தேர்தல் நடத்தப்பட உள்ளது.