சென்னை: பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புப் போலிசார் மேற்கொண்ட அதிரடி சோதனையின்போது பல லட்சம் ரொக்கப் பணமும் முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
மாநிலம் முழுவதும் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களில் லஞ்சம் தலைவிரித்தாடுவதாக பல ஆண்டுகளாக புகார் எழுந்து வருகிறது. இதையடுத்து அவ்வப்போது பதிவாளர் அலுவலகங்களில் காவல்துறை சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்வது வழக்கமாக உள்ளது.
இந்நிலையில், எப்போதும் ஆள் நடமாட்டத்துடன் பரபரப்பாகக் காணப்படும் சென்னை சைதாப்பேட்டை பத்திரப் பதிவு அலுவலகத்தில் நேற்று முன்தினம் லஞ்ச ஒழிப்புப் போலிசார் திடீர் சோதனை நடத்தினர்.
அந்த அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் அதிக அளவில் லஞ்சம் பெறுவதாக கிடைத்த புகார்களை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சோதனையின்போது கணக்கில் வராத சுமார் நான்கு லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் கண்டுபிடிக்கப்பட்டது. எதற்காக இந்த லஞ்சம் பெறப்பட்டது என்பது குறித்து முதற்கட்ட விசாரணை மேற்கொண்ட போலிசார், சில ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர். பின்னர் தெற்கு மாவட்ட பதிவாளர் மீனாகுமாரி உள்ளிட்ட அதிகாரிகளிடம் போலிசார் விசாரணை நடத்தினர். சோதனை நடவடிக்கை குறித்த முழு அறிக்கையும் விரைவில் வெளியாகும் என்றும் அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.