கடலூர்: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை நீடித்து வரும் நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள குளம், குட்டைகள், ஏரிகள் நிரம்பியுள்ளன. ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் வெளியேற முடியாமல் தவிப்பில் உள்ளனர்.
தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக கடலூரில் 10 ஆயிரம் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அங்கு 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கடலூர் ஒன்றியத்துக்குட்பட்ட அழகியநத்தம் முதல் தாழங்குடா வரை உள்ள நான்காயிரம் ஏக்கர் விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கடலூர் மாவட்டம் முழுவதுமே இப்போது வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.
சாத்தனூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீரால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் பாய்ந்தோடுவதாகவும் ஆற்றின் கீழ்மட்டத்தில் இருந்து 25 அடி உயரத்துக்கு தண்ணீர் செல்வதாகவும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் கெடிலம், பரவனாறு, மணிமுக்தா, கொள்ளிடம் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
720 ஏரிகள் நிரம்பின
சுமார் நூறு ஆண்டுகளுக்குப் பிறகு பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
காஞ்சிபுரம் வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகளில் மழைநீர் புகுந்தது. இதனால், அங்கிருந்தவர்கள் வேறு இடங்களுக்குச் சென்று தங்கி உள்ளனர்.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை ஆகிய மூன்று மாவட்டங்களில் 1,022 ஏரிகள் உள்ளன. அவற்றுள் இதுவரை 720 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டிஉள்ளன.
கடந்த பத்து நாள்களாக கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
12 கிராமங்களுக்குள் புகுந்த
வெள்ளநீர்
தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் கரை உடைந்து போனதில் திருவண்ணாமலை மாவட்டம் பாகூர் பகுதியில் உள்ள 12 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது.
அப்பகுதியில் உள்ள பாலங்கள், தடுப்பணைகளும் வெள்ளத்தில் மூழ்கிவிட்டன.
வெள்ள நீர் வடியவில்லை
இதற்கிடையே மழை ஓய்ந்து 13 நாள்கள் கடந்துவிட்ட நிலையில், சென்னை புறநகர்ப் பகுதிகளில் வெள்ள நீர் இன்னும் முழுமையாக வடியவில்லை.
இதனால் அப்பகுதிகளில் வசிப்பவர்கள் வெளியே செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
மூன்று மாவட்டங்களில் 720 ஏரிகள் நிரம்பின; 15 ஆயிரம் பேர் வெளியேற்றம்