சென்னை: இணையத்தில் உள்ள விளையாட்டுகளை ஆட பெற்றோர் அனுமதிக்காததால் விரக்தி அடைந்த 11ஆம் வகுப்பு பள்ளி மாணவன் பல லட்சம் ரொக்கப்பணம், தங்க நகைகளுடன் வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் சென்னையில் நிகழ்ந்துள்ளது.
வண்ணாரப்பேட்டையில் வசித்து வரும் அம்மாணவன், தினமும் பல மணி நேரம் இணையத்தில் உள்ள விளையாட்டுகளில் பங்கேற்று வந்துள்ளான்.
இதையடுத்து, படிப்பில் கவனம் செலுத்துமாறு பெற்றோர் கண்டித்துள்ளனர். மேலும், இணையத்தைப் பயன்படுத்தவும் தடை விதித்தனர்.
இதனால் கோபமும் விரக்தியும் அடைந்த அம்மாணவன், வீட்டை விட்டு வெளியேறுவது என்றும் வாய்ப்பு இருந்தால் ஏதாவது வெளிநாட்டுக்குச் செல்வது எனவும் திட்டமிட்டுள்ளான்.
அதன் பின்னர் வீட்டில் இருந்த ரூ.33 லட்சம் ரொக்கப்பணத்தையும் 213 பவுன் தங்க நகைகளையும் எடுத்துக்கொண்டு கடந்த 17ஆம் தேதி திடீரென மாயமானான் அம்மாணவன்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்தனர். போலிசார் துரித நடவடிக்கை மேற்கொண்டனர்.
மாணவனின் கைபேசி எண்ணை வைத்து, தாம்பரம் பேருந்து நிலையத்தில் இருப்பதைக் கண்டுபிடித்து அவனை மடக்கிப் பிடித்தனர்.
விசாரணையில், அவன் நேபாளத்துக்குச் செல்ல திட்டமிட்டதும் அதற்காக கொரோனா பரிசோதனை செய்துகொண்டதும் தெரிய வந்தது.
மேலும், அதிக நகைகளை எடுத்துச் சென்றால் ஏதேனும் கேள்வி எழும் என்று யோசித்து மொத்த நகைகளை 70 லட்சம் ரூபாய்க்கு அடமானம் வைக்க முயன்றுள்ளான் அம்மாணவன்.
தவிர, புதிய கைபேசி ஒன்றை வாங்கி, அதை வைத்து நண்பர்களுடன் இணையம் வழி விளையாடியதாகவும் இரு தினங்களாக தாம்பரம் பகுதியில் உள்ள தங்குவிடுதியில் அறை எடுத்து தங்கியதாகவும் அம்மாணவன் போலிசாரிடம் தெரிவித்துள்ளான்.