மாணவிக்கு பாலியல் தொல்லை: அரசு கல்லூரிப் பேராசிரியர் கைது
கோவை: மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் பேரில் கோவை அரசு கல்லூரி பேராசிரியர் கைதாகி உள்ளார். ரகுநாதன் என்ற அந்த பேராசிரியர் மாணவிகளிடம் இரட்டை அர்த்தத்தில் பேசுவதாகவும் பாலியல் தொல்லை கொடுப்பதாகவும் மாணவர் அமைப்பின் சார்பில் கல்வி நிர்வாகத்திடம் அண்மையில் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்தி பேராசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கல்லூரி முதல்வர் அறிவித்தார். இந்நிலையில், பேராசிரியர் ரகுநாதன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, பெண்ணை மானபங்கப்படுத்துதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவானது.
பாலில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பணம் கொள்ளை
சென்னை: சென்னை வேளச்சேரியை சேர்ந்த 26 வயது சந்தோஷ், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். தனது 61 வயது தந்தை, 75 வயது பாட்டி ஆகிய இருவருக்கும் உதவியாக 45 வயதான சுப்பம்மாள் என்பவரை சமையல் வேலைக்காக பணியமர்த்தி இருந்தார் சந்தோஷ். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பியபோது அவரது தந்தையும் பாட்டியும் மயக்க நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் வீட்டில் வைத்திருந்த ரூ.2.5 லட்சம் ரொக்கப் பணத்தையும் காணவில்லை. இதையடுத்து, விசாரணை மேற்கொண்ட போலிசாருக்கு சுப்பம்மாள் மீது சந்தேகம் எழுந்தது. தீவிர விசாரணையில், வயதான இருவருக்கும் பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து அவர்களைத் தூங்க வைத்துவிட்டு பணத்தை எடுத்ததாக அவர் ஒப்புக்கொண்டார்.
போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சிறப்புப் படை: நீதிமன்றம் உத்தரவு
சென்னை: போக்குவரத்து நெரிசல் காரணமாக சென்னை யில் தொழில்கள் பாதிக்கப்படுவதாக உயர் நீதிமன்றம் தெரி வித்துள்ளது. எனவே, போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சிறப்புப் படை அமைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக புதுவையைச் சேர்ந்த சிறு தொழில் வியாபாரிகள் சங்கம் வழக்கு தொடுத்திருந்தது. சென்னையின் ஜிஎஸ்டி சாலையில் உள்ள தங்குவிடுதிகள் முன்பு வாகனங்களை நிறுத்த போலிசார் லஞ்சம் பெற்றுக் கொண்டு அனுமதிப்பதாகவும் இதனால் தொழில்கள் பாதிக்கப்படுவதாகவும் அச்சங்கம் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், சென்னையில் உள்ள அனைத்து முக்கிய சாலைகளிலும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் லஞ்சம் பெறும் போலிசார் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது.
பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய முதல்வர்
சென்னை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை புறநகர்ப் பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் பார்வையிட்டார். அப்போது பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறி அவர் குறைகளையும் கேட்டறிந்தார். தேங்கியிருந்த மழை நீரில் நடந்து சென்று ஆய்வு மேற்கொண்ட அவர், உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

