சென்னை: கணக்கு தணிக்கையாளர்கள் நாட்டின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றி வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
கோவையில் நடைபெற்ற கணக்குத் தணிக்கையாளர்கள் மாநாட்டில் காணொளி வசதி மூலம் பங்கேற்றுப் பேசிய அவர், தமிழக நிதிநிலையைச் சீராக்குவதற்கு கணக்குத் தணிக்கையாளர்கள் உதவ வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
நிதித்துறை, பெரு நிறுவனங்களின் நிர்வாகம், கணக்கு தணிக்கை போன்ற செயல்பாடுகளில் அரசுக்கு உதவுவதோடு நின்றுவிடாமல், தங்கள் அறிவுத்திறன் மூலம் நாட்டை ஆள்பவர்களுக்கும் தொழிலதிபர்களுக்கும் சமூகத்தின் இதர பிரிவினருக்கும் பல வழிகளிலும் கணக்குத் தணிக்கையாளர்கள் துணை நிற்பதாகப் பாராட்டினார்.
"அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கிய நடவடிக்கைகளில் தமிழக அரசுக்குத் தேவையான பரிந்துரைகளை நீங்கள் தெரிவித்தால் உடனடியாக அவற்றில் கவனம் செலுத்தி, நடைமுறைப்படுத்துவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம்," என்றார் முதல்வர் ஸ்டாலின்.
சட்டங்களை இயற்றுவதிலும் வேளாண் துறை, நாட்டின் வளர்ச்சிக்கு கணக்குத் தணிக்கையாளர்கள் பங்களித்து வருவதாகக் குறிப்பிட்ட முதல்வர், அவர்களை, 'நாட்டு வளர்ச்சிக்கான பங்களிப்பாளர்கள்' என்று அழைப்பதுதான் சரியாக இருக்கும் என்றார்.
இந்தியா உலக அளவில் முன்னணியில் இருக்கவேண்டும் என்றால் அதற்கு வலுவான நிதிக் கட்டமைப்புகளும் ஒழுங்குமுறைகளும் தேவை என்றும் அதற்கான யோசனைகளை வழங்குவதில் கணக்குத் தணிக்கையாளர்களின் திறமை மீது நாட்டில் உள்ள அனைவருக்கும் பெரும் நம்பிக்கை உள்ளது என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
"அரசின் உயர்பதவிகளில் உங்கள் துறையைச் சேர்ந்த பலர் உள்ளனர். அரசு அமைக்கும் முக்கிய குழுக்களிலும் இடம் பெற்று தகுந்த ஆலோசனைகளை வழங்குகின்றனர்.
"பொருளாதார குற்றப்பிரிவிலும் ஊழல் தடுப்புப்பிரிவிலும் நிறுவனங்களின் மோசடிகளை விசாரிக்க தமிழ்நாடு அரசு புதிய தணிக்கை பிரிவுகளை இப்போது தொடங்கி உள்ளது," என்று முதல்வர் ஸ்டாலின் மேலும் தெரிவித்தார்.
இதற்கிடையே முதல்வர் அலுவலகம் வெளியிட்ட காணொளிப்பதிவு ஒன்றில், இந்திய தொழில்நுட்பக் கூட்டமைப்புடன் இணைந்து நடத்தும் 'கனெக்ட்' கருத்தரங்கின் மூலம், தகவல் தொழில்நுட்பவியல் துறையில் தமிழகத்துக்குப் புதிய முதலீடுகளை ஈர்க்க அரசு திட்டமிட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்திய அளவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக ஆக்க வேண்டும் என்று தாம் விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

