சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வாங்கித் தருவதாக கூறி ஐம்பது லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்ததாக மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியின் முன்னாள் உதவியாளர் நரோத்தமன் மீது வழக்குப் பதிவாகி உள்ளது.
இதையடுத்து, நரோத்தமன் அவரது தந்தையுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலையைச் சேர்ந்த புவனேஸ்குமார் என்பவர், தனது சித்தப்பா மகளுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு நரோத்தமனிடம் ஐம்பது லட்சம் ரூபாய் கொடுத்ததாக கூறியுள்ளார்.
பணத்தைப் பெற்றுக்கொண்ட நரோத்தமன், வாய்ப்பு வாங்கித் தராததுடன், பணத்தை திருப்பித்தரவும் மறுத்துவிட்டதாக கூறியுள்ள புவனேஸ்குமார், இந்த மோசடியில் நரோத்தமனின் தந்தைக்கும் பங்குள்ளதாக தமது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகாரை அடுத்து அமைச்சரின் உதவியாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், சென்னை போலிசார் நரோத்தமனையும் அவரது தந்தையையும் கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாக மேலும் ஒருவர் தேடப்பட்டு வருவதாகவும் தனிப்படை போலிசார் அவரை நெருங்கிவிட்டதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.