சென்னை: தமிழக மக்கள் மத்தியில் நோரோ என்ற கிருமித்தொற்று புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
அண்மையில் பெய்த வடகிழக்குப் பருவமழை காரணமாக ஆங்காங்கே மழைநீர் தேங்கி நின்றது. இந்நீரோடு கழிவுநீரும் குப்பைக் கூளங்களும் சேர்ந்து தண்ணீரை மிகவும் அசுத்தமாக்கி இருந்தன.
இந்நிலையில், தண்ணீா் மாசுபாட்டினால் தமிழகத்தில் பலரும் நோரோ கிருமித்தொற்றுக்கு ஆளாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்தக் கிருமித்தொற்றின் முக்கிய அறிகுறியாகக் கருதப்படும் வயிற்றுப்போக்கால் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, மாநிலம் முழுவதும் நோரோ கிருமித் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
கடந்த ஈராண்டுகளாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மெல்ல மெல்ல அதிலிருந்து மக்கள் மீண்டுவரும் தருணத்தில், நோரோ தொற்று புது அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.
அண்டை மாநிலமான கேரளாவில் 20க்கும் மேற்பட்டோருக்கு நோரோ பாதிப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கர்நாடக-கேரள எல்லையில் நோரோ தொற்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, கர்நாடக அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

