சென்னை: சென்னையில் 151 உடற்பிடிப்பு மையங்களில் ஒரே நேரத்தில் தனிப்படை போலிசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அங்கு ரகசியமாக பாலியல் தொழில் நடப்பதாக வந்த புகாரை அடுத்து போலிசார் இந்த அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, சென்ைன மாநகர போலிஸ் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின்படி, சென்னையில் செயல்படும் 151 உடற்பிடிப்பு மையங்கள், ஸ்பாக்களில் 12 தனிப்படையின் கீழ் 150 குழுவை அமைத்து ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, மாமூல் வசூலிக்கும் போலிஸ் அதிகாரிகள், பாலியல் தொழில் பின்னணியில் உள்ள முக்கிய புள்ளிகள் குறித்த தகவல்களும் ஆவணங்களும் சிக்கியதாகவும் பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்கள் மீட்கப்பட்டதாகவும் தமிழக ஊடகத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
சென்னையில் ஏராளமான உடற்பிடிப்புக் கூடங்கள் செயல்படுகின்றன. ஆயுர்வேத சிகிச்சை என்ற பெயரில் இவை நடத்தப்பட்டு வருகின்றன. சென்னை மாநகராட்சியில் இதற்கு அனுமதி பெற வேண்டும்.
மாநகராட்சியும் விதிமுறைகளுக்கு உட்பட்டுத்தான் இந்த கூடங்களுக்கு அனுமதி வழங்குவதாகவும் கூறப்படுகிறது.
உடற்பிடிப்பு மையங்களில் ஆண்களுக்கு ஆண்களும் பெண்களுக்கு பெண்களும் மட்டுமே உடலைப் பிடித்துவிடும் சேவையை வழங்க வேண்டும்.
ஆனால், இந்த விதிமுறையை மீறி ஆண்களுக்கு பெண்களும் பெண்களுக்கு ஆண்களும் உடல் பிடித்துவிட்டு சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதாக போலி சாருக்கு புகார்கள் வந்தன.
அத்துடன், சென்னையில் 151 உடற்பிடிப்பு மையங்கள் விதிமுறைகளை மீறியும் உரிய அனுமதி பெறாமலும் செயல்படுவதாகவும் பட்டியலிடப்பட்டது.
இதையடுத்து அண்ணாநகர், விருகம்பாக்கம், கேகே நகர், தி.நகர், அடையார், திருவான்மியூர், கிண்டி உட்பட சென்னை முழுவதும் உள்ள அனைத்து கூடங்களிலும் ஒரே நேரத்தில் சோதனை நடந்தது.
அப்போது சட்ட விரோதமாக உடற்பிடிப்பு மையங்களை நடத்திய உரிமையாளர்களும் தரகர்களும் பிடிபட்டனர். இந்த சோதனை தொடர்பான விசாரணைகள் மேலும் தொடர்ந்து வருகின்றன.