புதுக்கோட்டை: சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் கொல்லப் பட்ட சம்பவம் தொடர்பில் இரு சிறுவர்கள், ஓர் இளையர் உள்பட நால்வரை நேற்று தனிப்படை போலிசார் அதிரடியாக கைது செய்தனர்.
தஞ்சாவூர், புதுக்கோட்டையைச் சேர்ந்த 10 வயது, 17 வயதிலான இரு சிறுவர்கள், 19 வயது இளையர் மணிகண்டன் உட்பட நால்வர் போலிசாரின் பிடியில் சிக்கி உள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை ரகசிய இடத்தில் வைத்து போலிசார் விசாரித்து வருகின்றனர்.
புதுக்கோட்டை அருகே ஆடு திருடியவர்களைப் பிடிப்பதற்காக அவர்களை இரு சக்கர வாகனத்தில் துரத்திச்சென்ற திருச்சி, நாவல்பட்டு காவல்நிலைய சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் பூமிநாதன், 51, ஞாயிறன்று அதிகாலையில் படுகொலை செய்யப்பட்டார்.
ஒரு காவல் அதிகாரியையே கொன்றுள்ள சம்பவம் தமிழக மக்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்ட நிலையில், கொலையாளிகளைப் பிடிக்க எட்டு தனிப்படைகள் உடனடியாக அமைக்கப்பட்டன.
தனிப்படை போலிசார் சம்பவம் நடந்த பகுதியிலும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் சந்தேக நபர்களை வலைவீசி தேடிவந்ததை அடுத்து நால்வர் பிடிபட்டுள்ளனர்.
கொல்லப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதி உதவியும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
''ஆடு திருடர்களைப் பிடித்ததும் சக போலிசாரின் உதவிக்காக பூமிநாதன் காத்திருந்தார். அப்போது திருடர்கள் இருவர் தப்ப முயன்றுள்ளனர். அவர்களுடன் தனியாளாக பூமிநாதன் போராடியபோது, திருடர்கள் தங்களது வாகனத்தில் வைத்திருந்த கத்தியை எடுத்து பூமிநாதனின் தலையில் வெட்டிவிட்டு தப்பியுள்ளனர். கொலையாளிகள் தூக்கி எறிந்த பூமிநாதனின் தொப்பி, வாக்கி-டாக்கி, கைபேசி மீட்கப்பட்டது,'' என்று போலிசார் விவரம் கூறியுள்ளனர்.