மத்திய குழுவினர் இன்றும் ஆய்வு
சென்னை: தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட வந்த ஏழு பேர் கொண்ட மத்திய குழுவினர், இரண்டு குழுக்களாகப் பிரிந்து பல்வேறு பகுதிகளிலும் நேற்று முதல் ஆய்வு நடத்தி வருகின்றனர். சென்னை, காஞ்சிபுரத்தை தொடர்ந்து செங்கல்பட்டு, மாமல்லபுரத்தில் வெள்ள பாதிப்புகளை நேற்று நேரில் பார்வையிட்ட மத்திய குழுவினர் இன்று கடலூா், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூா், தஞ்சாவூா், வேலூா், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஆய்வு செய்ய உள்ளனர்.
கீழே அமர்ந்திருந்த வானதியை மேடைக்கு அழைத்த முதல்வர்
கோவை: கோவையில் நேற்று நடந்த அரசு விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியபோது, சென்னைக்கு நிகராக கோவையிலும் வளர்ச்சிப் பணிகள் முடுக்கிவிடப்படும் என்று தெரிவித்தார். அப்போது கீழே அமர்ந்திருந்த கோவை தொகுதி எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசனை மேடைக்கு வருமாறு அழைத்து, தனது அருகிலேயே ஒரு நாற்காலி போடச்சொல்லி அமரவைத்தார். இந்தக் காணொளி அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
தலைமை நீதிபதி: நேற்றுதான் தமிழ் கற்க ஆரம்பித்தேன்
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நேற்று பொறுப்பேற்றுக்கொண்ட முனீஷ்வர் நாத் பண்டாரி, தமிழகத்துக்கு வந்த முதல் நாளிலேயே தமிழ் கற்றுக்கொள்ளத் தொடங்கிவிட்டதாகக் கூறியுள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் நேற்று காலையில் ஆளுநா் ஆா்.என்.ரவி, முனீஸ்வா் நாத் பண்டாரிக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். "எவ்வித அச்சமுமின்றி, பாரபட்சமின்றி நேர்மையாகச் செயல்பட உறுதி அளிக்கிறேன். நேற்றுதான் தமிழ் கற்கத் தொடங்கினேன். அடுத்து வரும் நாட்களில் தமிழில் பேச முயற்சி செய்வேன்," என்று முனீஸ்வர் நாத் கூறினார்.
கைதிக்கு கஞ்சா: இருவர் கைது
புதுச்சேரி: புதுவை காலாப்பட்டில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்கு 200க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இந்நிலையில் வழக்கு ஒன்றில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள அஜித் என்பரை அரியாங்குப்பத்தைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன், அகிலன் ஆகியோர் சந்திக்கச் சென்றனர்.
அப்போது அஜித்துக்கு அவர்கள் கொடுத்த 2 பிஸ்கெட் பொட்டலங்களை சிறை அதிகாரிகள் சோதனை செய்தபோது அதில் கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகள் கொடுத்த புகாரின்பேரில் காலாப்பட்டு போலிசார் வழக்குப்பதிவு செய்து ஜெகதீஸ்வரன், அகிலன் ஆகியோரைக் கைது செய்தனர்.
தமிழ் புறக்கணிப்பு: சீமான் கண்டனம்
சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை, இந்தியத் தொழில்நுட்ப கழகத்தில் நடைபெறும் நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் தொடர்ந்து புறக்கணித்து வருவது கண்டனத்திற்குரியது. தமிழ்த்தாய் வாழ்த்திற்குப் பதிலாக சமஸ்கிருத மந்திரங்களை ஓதுவது தமிழர்களை அவமதிக்கும் செயலாகும் எனத் தெரிவித்துள்ளார்.

