ரூ.3,723 கோடி முதலீடுகள் ஈர்ப்பு: 74,835 பேருக்கு வேலைவாய்ப்பு
கோவை: தமிழகத்தை தொழில்துறையில் சிறந்த, முதன்மை மாநிலமாக வளர்த்தெடுக்க வேண்டும் என்பதே திமுக அரசின் இலக்கு என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
கோவையில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், இந்தியாவின் முதல் தொழில் முகவரியாக தமிழ்நாடு மாற வேண்டும் என்றார்.
கோவை முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் தமிழகத்துக்கு கோடிக்கணக்கான முதலீடுகள் ஈர்க்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இதன்வழி லட்சக்கணக்கான இளையர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக இருக்கிறது என்றார்.
"தொழில் துறையை வளர்ப்பதன் மூலமாக மக்களை வளர்க்க முடியும். மக்களது வளர்ச்சியில் தான் நாட்டின் வளர்ச்சி உள்ளது. இந்தியாவின் முன்னணி தொழில் மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றி காட்டுவோம்.
"நான் எப்போதும் அதிகம் பேசமாட்டேன். செயலில் என்னுடைய பணிகள் இருக்கும். பேச்சைக் குறைத்து செயலில் திறமையைக் காட்டு என்ற பழமொழிக்கேற்ப செயல்படுவோம்," என்றார் முதல்வர் ஸ்டாலின்.
கோவை மாவட்டத்தை சிறந்த மாவட்டமாக, அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளைக் கொண்டிருக்கக்கூடிய மாவட்டமாக மாற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், பின்னர் ரூ.646 கோடியே 61 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு வழங்கினார்.
இதற்கிடையே கோவையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ரூ.34,723 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மொத்தம் 52 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதன் மூலம் 74,835 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் தமிழக அரசு அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.

