வேலூர்: பாலாற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தில் இதுவரை 65 வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. மேலும், 35 வீடுகள் எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பாலாற்றின் கரையோரப் பகுதிகளில் உள்ள கட்டடங்கள் பலவும் வலுவிழந்துள்ளன.
இந்நிலையில், பாலாற்றில் பல சடலங்கள் மிதந்து வருவதைக் காண முடிவதாக கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மூன்று மாவட்டங்கள் பாலாற்று வெள்ளப்பெருக்கால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. மூன்று மாவட்டங்களிலும் இதுவரை 1,096 வீடுகள் முற்றிலுமாக அல்லது ஒரு பகுதி அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
கரையோரப் பகுதிகளில் அமைந்துள்ள சுடுகாடுகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளதால் அங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ள சடலங்கள் ஆற்றில் மிதக்கின்றன.
நேற்று முன்தினம் இரண்டு பெண்களின் உடல்கள் காங்கேயநல்லூர் பகுதியில் மிதந்து வருவதைக் கண்டு பொதுமக்கள் அவற்றை மீட்டனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோட்டையின் மதில் சுவர் நேற்று முன்தினம் இடிந்து விழுந்தது. அங்கு ராஜகிரி, கிருஷ்ணகிரி என இரண்டுகோட்டைகள் உள்ளன. இவற்றைச் சுற்றி சுமார் 15 கிலோ மீட்டருக்கு பெருங்கற்களாலான மதில் சுவர் அமைக்கப்பட்டுள்ளது.
அண்மைய தொடர் மழை காரணமாக, கோட்டையில் உள்ள கோவிலுக்குச் செல்லும் பாதையில் உள்ள மதில் சுவர் முற்றிலும் இடிந்து விழுந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, சென்னையில் நேற்று முன்தினம் மீண்டும் பரவலாக மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வழக்கம்போல் மழைநீர் தேங்கியுள்ளது.
பல பகுதிகளில் வாரத்தின் முதல் நாளே மழை காரணமாக ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலால் வாகனமோட்டிகள் அவதிக்கு ஆளாகினர்.