செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
0b5abd68-79c9-4afd-831f-edf2f03acbfa
-

மலை மீது ஏறி 5 வயதுச் சிறுமி சாதனை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், மலைப்பட்டு கிராமத்தில் உள்ள 101 அடி உயரமுள்ள மலையின் உச்சியை கயிறு மூலம் 2.15 நிமிடங்களில் அடைந்து சாதனை படைத்துள்ளார் சென்னையைச் சேர்ந்த ஐந்து வயதுச் சிறுமி சாந்தினி லட்சுமி. குழந்தைகள் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க பெற்றோர் ஊக்கமளிக்க வலியுறுத்தி தாம் இச்சாதனை முயற்சியில் ஈடுபட்டதாக அவர் கூறியுள்ளார்.

கமல்ஹாசனை நலம் விசாரித்தார் ரஜினி

சென்னை: கொரோனா கிருமித்தொற்று பாதிப்புக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கமல்ஹாசனை தொலைபேசி வழி தொடர்புகொண்டு நடிகர் ரஜினி நலம் விசாரித்துள்ளார். அப்போது, விரைவில் தொற்றில் இருந்து மீண்டு வர அவர் தமது வாழ்த்துகளைத் தெரிவித்தார். முன்னதாக, தமிழக முதல்வர் ஸ்டாலினும், 'அன்பு நண்பர் கமல்ஹாசன் தொற்றில் இருந்து விரைவில் மீண்டு, தனது பணிகளைத் தொடர விழைகிறேன்' என்று கூறியிருந்தார்.

சமையல் எரிவாயு உருளை வெடித்துச் சிதறியதில் மூதாட்டி பலி; பலர் காயம்

சேலம்: சமையல் எரிவாயு உருளை வெடித்துச் சிதறியதில், நான்கு வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. சேலம் மாவட்டம் கருங்கல்பட்டியில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் இடிபாடுகளில் சிக்கி ஒரு மூதாட்டி பலியானார். 13 பேர் காயமடைந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக அணிக்கு ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: மாநிலங்களுக்கு இடையே நடத்தப்படும் 'சையது முஸ்தாக் அலி டி20' கிரிக்கெட் கிண்ணப் போட்டியில் தமிழக அணி இரண்டாவது முறை வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து, விஜய்சங்கர் தலைமையிலான அணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதிப்போட்டியில் கர்நாடக அணியை வீழ்த்தியது தமிழகம்.

மதுரை: மரங்களைக் காக்க வலியுறுத்து

மதுரை: மதுரை கே.கே.நகரில் உள்ள 80 அடி சாலையில் உள்ள பழமையான நிழல் தரும் மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டு வருகின்றன. இதனால் அந்தப் பகுதியில் பசுமை பாதிப்பு ஏற்படும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர். மின்வாரியப் பணிகளுக்காகவும் சாலை விரிவாக்கத்துக்காகவும் மரங்கள் வெட்டப்படுவதாக கூறப்படுகிறது. இது குறித்து மதுரை மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூக்கிச் செல்லப்பட்ட கன்றுக்குட்டியை மூன்று கி.மீ துரத்திய எருமை மாடு

சென்னை: கன்றுக்குட்டியை இருசக்கர வாகனத்தில் தூக்கிச் சென்ற போது, அதை ஈன்ற எருமை மாடு மூன்று கிலோமீட்டர் தூரம் பின்னாலேயே ஓடியது (படம்). சென்னையைச் சேர்ந்த பிரசாந்த் பால் வியாபாரம் செய்து வருகிறார். அவர் வளர்க்கும் எருமை மாடு ஒன்று மேய்ச்சலுக்குச் சென்ற இடத்தில் திடீரென குட்டி ஈன்றது. இதையடுத்து, கன்றுக்குட்டியை தனது இருசக்கர வாகனத்தில் கூட்டிச் சென்றார் பிரசாந்த். ஆனால், கன்றுக்குட்டியைப் பிரிய மனமில்லாத அந்த எருமை மாடு அந்த இருசக்கர வாகனத்தை சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் பின்தொடர்ந்து ஓடியது. அப்போது சாலையில் சென்ற பொதுமக்கள் தாய்ப்பாசத்தைக் கண்டு நெகிழ்ந்து போயினர்.