சென்னை: தொடர் மழை காரணமாக அண்டை மாநிலங்களில் இருந்து காய்கறி வரத்து குறைந்துள்ளதே தமிழகத்தில் தக்காளி விலை கடுமையாக உயரக் காரணம் என வேளான் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார். தற்போது சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள மொத்த விற்பனைக் கடைகளில் ஒரு கிலோ தக்காளி 130 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
அதேசமயம், கூட்டுறவு சங்கங்கள் சார்பில் நடத்தப்படும் பண்ணைப் பசுமைக் கடைகளில் ஒரு கிலோ 85 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, கோயம்பேடு சந்தையில் மற்ற காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளது.முருங்கை, புடலங்காய், பாகற்காய், கத்தரிக்காய், சுரைக்காய் ஆகியவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.