சென்னை: முன்னாள் முதல்வர் காலஞ்சென்ற ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லமான வேதா நிலையத்தை அரசு கையகப்படுத் தியதை சென்னை உயர் நீதிமன்றம் நேற்று அளித்த அதிரடித் தீர்ப்பின் மூலம் ரத்து செய்து உள்ளது.
அந்த இல்லத்தை அரசுடைமை ஆக்கிய முந்தைய அதிமுக அரசு, அதனை நினைவு இல்லமாக மாற்றப்படும் என அறிவித்திருந்தது. வேதா நிலையம் தவிர அங்குள்ள அசையும் சொத்துகளும் அரசு உடமையாக்கப்பட்டன.
இந்தச் சட்டத்தை எதிர்த்து ஜெயலலிதாவின் வாரிசுகளான தீபா, தீபக் ஆகிய இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அதேபோல வேதா நிலையத்துக்கு 67 கோடியே 90 லட்சம் ரூபாயை இழப்பீடாக நிர்ணயித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்தும் வழக்கு போடப்பட்டது. இந்த இரு வழக்குகளையும் நீதிபதி சேஷசாயி விசாரித்தார்.
அப்போது, தீபா மற்றும் தீபக் தரப்பில் தனிநபர் சொத்துகளை கையகப்படுத்துவது தொடர்பாக சட்டம் இயற்ற அரசுக்கு அதிகாரமில்லை எனவும் வேதா நிலையத்தை அரசுடைமையாக்கி பிறப்பித்த சட்டம் செல்லாது என்றும் நினைவு இல்லமாக மாற்றத் தடை விதிக்க வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.
மேலும் வாரிசுகளாக அறிவிக் கப்பட்ட தங்களை ஆலோசிக்காமல் நிலம் கையகப்படுத்தப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்த னர்.
வீட்டிற்கு 67 கோடியே 90 லட்ச ரூபாய் அளவிற்கு இழப்பீடு நிர்ணயித்து, அந்த தொகையை சென்னை மாவட்ட நீதிமன்றத்தில் நிலம் கையகப்படுத்துதல் அதிகாரி செலுத்தியது தவறு எனவும் தீபா, தீபக் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சேஷசாயி, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து உத்தரவிட்டு இருந்தார்.
இந்த நிலையில் நேற்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது "ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை அரசுடைமை ஆக்கியது செல்லாது," என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
வேதா நிலையத்தை மூன்று வாரங்களில் வாரிசுகளான தீபா, தீபக்கிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இது மட்டுமல்லாமல் வேதா நிலையம் ஒரு நினைவிடமாகவும் மெரினா கடற்கரையில் கட்டப்பட்டு உள்ள 'பீனிக்ஸ்' என்ற பெயரில் மற்றொரு நினைவிட மாகவும் இரண்டு நினைவிடங்கள் எதற்கு என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.