சென்னை: அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஒரு தரப்பினர், அதிமுகவை வழிகாட்டுதல் குழுதான் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நேற்று காலை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது.
கூட்டத்தில் அ.தி.மு.க. வழிகாட்டுதல் குழுவை சீரமைக்க வேண்டும். 11 பேர் எண்ணிக்கை கொண்ட குழுவை 18ஆக அதிகரிக்க வேண்டும். வழிகாட்டுதல் குழுவுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டும் என்று ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அ.தி.மு.க.வை வழிகாட்டுதல் குழுதான் நடத்த வேண்டும் என்று செங்கோட்டையனும் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
மேலும் சிலர் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை குழுவின் தலைவராகவோ அவைத் தலைவராகவோ நியமிக்கலாம் என்று கூறினர். இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியதால் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது.