அப்போலோ வாதத்தை ஏற்க
உச்ச நீதிமன்றம் மறுப்பு
புதுடெல்லி: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் வேறு நீதிபதிகளைச் சேர்க்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி அப்போலோ மருத்துவமனை வழக்குத் தொடுத்தது.
இந்த வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது.
அப்போது, ஆறுமுகசாமி ஆணையத்தில் வேறு நீதிபதிகளைச் சேர்க்கும் அப்போலோ தரப்பு வாதத்தை ஏற்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
ஆறுமுகசாமி ஆணையத்தில் வேறு நீதிபதிகளைச் சேர்த்தால் தற்போதைய ஆணையத்தின் செயல் பாடுகளைப் பாதிக்கும் என்று நீதிபதிகள் கூறினர்.
ஆனால் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில் மருத்துவக்குழு ஒன்றை நியமிக்க ஆட்சேபணை இல்லை என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
மாடுகளுக்கு வலை வீசிய
மதுரை மாநகராட்சி
மதுரை: மதுரை சாலைகளில் சுற்றித் திரிந்த 85 மாடு களை மதுரை மாநகராட்சியினர் பிடித்து அவற்றின் உரிமையாளர்களுக்கு மொத்தம் ஒரு லட்ச ரூபாய் வரை அபராதம் விதித்துள்ளனர்.
நகர்ப் பகுதிகளில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகள் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதால் அவற்றின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
சாலையில் சுற்றும் மாடுகளைப் பிடிப்பதற்காக குழு அமைக்கப்பட்ட நிலையில் கடந்த பத்து நாட்களில் மட்டும் 85 மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதன் உரிமையாளர்களுக்கு மொத்தம் ஒரு லட்சத்து 20ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மாடுகளை அழைத்துச் செல்லாவிடில் ஏலம் விடப்படும் என்றும் மாநகராட்சி அறிவித்துள்ளது.
இலங்கை தமிழர் மறுவாழ்வு;
ரூ.317 கோடி ஒதுக்கீடு
சென்னை: சென்னையை அடுத்துள்ள புழல்
காவாங்கரை இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய பிறகு பேசிய சிறுபான்மையினர் நல அமைச்சர் செஞ்சி மஸ்தான், தமிழகம் முழுவதும் உள்ள 106 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
இதற்காக தமிழக அரசு 317 கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பதாகவும் அவர் கூறினார்.

