சென்னை: தமிழ்நாட்டில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சீரமைக்க ரூ.4,625 கோடியை வழங்கவேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
இம்மாதம் 11ஆம் தேதி முதல் தமிழகத்தில் பெய்த தொடர் கனமழையால், பல குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. விவசாய நிலங்களும் நீரில் மூழ்கி அழுகின. மாடு கன்றுகளும் இறந்து கிடந்தன.
இந்நிலையில், இந்தப் பாதிப்பு களை நேரில் பார்வையிட்ட மத்தியக் குழுவினா், தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலினை புதன்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
அப்போது மத்திய அரசிடம் தமிழக அரசு ஏற்கெனவே கோரிய உடனடி நிவாரணத் தொகையாக 550 கோடி ரூபாயும் மறு சீரமைப்புப் பணிகளுக்காக 2,079 கோடியையும் வழங்கவேண்டும் என முதல்வர் வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுகுறித்து வருவாய்த் துறையினா் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஏற்கெனவே மத்திய அரசுக்கு சமா்ப்பிக்கப்பட்ட முதல்கட்ட அறிக்கையில் கோரப்பட்ட தொகை, அதனைத் தொடா்ந்து ஏற்பட்ட சேதங்கள் மதிப்பீடு செய்யப்பட்டு தற்காலிக சீரமைப்புப் பணிகளுக்காக ரூ.1,070.92 கோடியும் நிரந்தரமான சீரமைப்புப் பணிகளுக்காக ரூ.3,554.88 கோடியும் என மொத்தம் ரூ.4,625.80 கோடி கூடுதலாக அளிக்க மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.

