செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
f41e1b80-9f6b-456c-8166-7aef2338e0f6
-

கோயிலுக்குள் வெள்ளம்; பக்தர்கள் அவதி

திருச்செந்தூர்: நேற்று காலை பெய்த கனமழை காரணமாக திருச்செந்தூர் நகரெங்கும் வெள்ளம் சூழ்ந்தது. இங்குள்ள புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவிலையும் வெள்ளநீர் சூழ்ந்ததால் பக்தர்கள் பெரும் அவதிப்பட்டனர். அதேபோல், குடியிருப்புகளிலும் வெள்ளநீர் புகுந்ததால் அந்த தண்ணீரை வெளியேற்ற மக்கள் படாதபாடுபட்டனர்.

பல லட்சம் ரூபாய் உப்பு சேதம்

தூத்துக்‍குடி: தூத்துக்‍குடியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான உப்பளங்கள் சேதமடைந்துள்ளன. இதனால், உப்பின் விலை அதிகரிக்‍கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் இம் மாவட்டத்தில் உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. ஒரே நாளில் கொட்டித்தீர்த்த மழையால், உப்பளங்களில் தேக்‍கி வைக்‍கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான உப்பு சேதமடைந்துள்ளது. இதனால் உப்பு விலை அதிகரிக்‍கும் சூழல் ஏற்பட்டுள்ளது. உப்பு உற்பத்தி தொடங்க பல மாதங்களாகும் என உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

'முகக்கவசம் அணியாதோர் அதிகரிப்பு'

திருச்சி: தமிழ்நாடு முழுவதும் 11வது மெகா தடுப்பூசி முகாம் நேற்று 50,000 மையங்களில் நடைபெற்றது. சென்னையில் மட்டும் 1,600 தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன.

சென்னை வள்ளலார் நகரில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை பார்வையிட்ட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தமிழகத்தில் நேற்று வரை 76% மக்கள் முதல் தவணை தடுப்பூசியும் 40% மக்கள் இரண்டாம் தவணை தடுப்பூசியும் போட்டுக்கொண்டுள்ளனர். தமிழகத்தில் முகக்கவசம் அணிவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. எந்த இடமாக இருந்தாலும் 100% முகக்கவசம் அணியவேண்டும். முகக்கவசம், தடுப்பூசி இவையே மக்களைப் பாதுகாக்கும் ஆயுதம்," என்றார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிட முடிவு

ஈரோடு: ஏற்கெனவே நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட்டு, கணிசமான இடங்களில் வெற்றி பெற்றிருந்ததை அடுத்து, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடவும் தயாராகி வருகின்றனர். மாவட்டத் தலைவர் பாலாஜி தலைமையில் நடந்த கூட்டத்தில், ஈரோடு மாநகராட்சியில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுவது என விஜய் மக்கள் இயக்கத்தினர் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.

ஐவரின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம்

சேலம்: விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்தபடி, சேலத்தில் சமையல் எரிவாயு உருளை வெடித்ததால் உயிரிழந்த ஐவரின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சத்தை ஆட்சியர் கார்மேகம் வழங்கினார்.