புதுடெல்லி: அம்மா உணவகம் போல தமிழகத்தில் 500 'கலைஞர் உணவகங்கள்' அமைக்கப்படும் என்று புதுடெல்லி கூட்டத்தில் உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்தார்.
இந்தியாவில் 'மாதிரி சமுதாய சமையல் கூடம்' என்ற திட்டத்தைச் செயல்படுத்துவது பற்றிய ஆலோசனைக் கூட்டம் புதுடெல்லியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் நடத்தது.
அதில் கலந்துகொண்ட தமிழக அமைச்சர், தமிழகத்தில் 2007ல் நடைமுறைக்கு வந்த பொதுவிநியோகத் திட்டம் பற்றி பேசினார்.
வரும் பொங்கலை முன்னிட்டு 2022 ஜனவரியில் 21 உணவுப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,161 கோடியில் வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
தமிழக அரசு 650 சமூக உணவகங்களை 'அம்மா உணவகம்' என்ற பெயரில் தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நடத்தி வருவதாகவும் கடந்த ஜூன் 1ஆம் தேதி முதல் நவம்பர் 18ஆம் தேதி வரை 15 கோடிக்கும் மேற்பட்டோர் அந்த உணவகங்கள் மூலம் பயனடைந்து உள்ளதாகவும் குறிப்பிட்ட அமைச்சர், இதேபோல கூடுதலாக 500 சமுதாய உணவகங்கள் 'கலைஞர் உணவகம்' என்ற பெயரில் அமைக்கப்படும் என்றும் அறிவித்தார்.
இத்திட்டத்துக்கு இந்த நிதியாண்டில் செப்டம்பர் மாதம் வரை 3,227 டன் அரிசியும் 362 டன் கோதுமையும் பயன்படுத்தப்படுகிறது. ஓர் உணவகத்துக்குச் சரா சரியாக மாதத்துக்கு ரூ.3.5 லட்சம் செலவிடப்படுகிறது.
இத்திட்டத்தை வெற்றிகரமாக தொடர்ந்து நடத்தவும் விரிவுபடுத்தவும் மத்திய அரசு 100% நிதியுதவி வழங்க வேண்டும் என்று அமைச்சர் கோரிக்கை விடுத்தார்.