செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
523abb63-90af-4bc8-afd2-03700031b9f6
-

மேலும் லட்சம் பேருக்கு ஓய்வூதியம்

சென்னை: சமூக பாதுகாப்புத் திட்டங்களின்கீழ், புதிதாக 1.01 லட்சம் பேர் ரூ.1,000 ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணையை முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்தார். தமிழகத்தில் சமூக பாதுகாப்புத் திட்டங்களின்கீழ், 3.31 மில்லியன் பேர் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். நடப்பு நிதியாண்டுக்கான திருத்திய வரவுசெலவுத் திட்டத்தில், இத்திட்டங்களுக்காக 4,807.56 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

கடப்பிதழ் பெற 'டிஜிலாக்கர்'

சென்னை: கடப்பிதழ் (பாஸ்போர்ட்) பெற விண்ணப்பிப்போர் நேர்காணலின்போது, 'டிஜிலாக்கர்' செயலி மூலம் சான்றிதழ்களைத் தாக்கல் செய்யும் வசதியை சென்னை மண்டல கடப்பிதழ் அலுவலகம் அறிமுகப்படுத்தி உள்ளது.

'டிஜிலாக்கர்' என்ற மின்னணு பாதுகாப்புப் பெட்டக வசதியை மத்திய அரசின் மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சு அறிமுகப்படுத்தி உள்ளது.

பொதுமக்கள் தங்களது கல்வி, சாதி, இருப்பிட, வருமானச் சான்றிதழ்கள், ஓட்டுநர் உரிமம், வீட்டுப் பத்திரங்கள், காப்பீட்டு ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்து முக்கிய ஆவணங்களையும் மின்னணு முறையில் அதில் சேகரித்து வைக்க முடியும்.

451 கோயில்களில் குடமுழுக்கு

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 451 கோவில்களுக்கு ஆகம விதிகள்படி திருப்பணிகள் மேற்கொள்ள வல்லுநர் குழுவால் பரிந்துரைக்கப்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சென்னையில் அறிவித்தார்.

சென்னை, திண்டுக்கல், மதுரை, வேலூர், திருவண்ணாமலை, ஈரோடு, சேலம், கோவை, தஞ்சாவூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் அந்தக் கோயில்கள் அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

79 பாலங்கள் கட்ட அங்கீகாரம்

சென்னை: தமிழ்நாடு முழுவதிலும் 79 புதிய பாலங்களைக் கட்டவும் பழைய பாலங்களைச் சரிப்படுத்தவும் அரசாங்கம் அங்கீகாரம் அளித்துள்ளது.

அந்தப் பணிகள், 210.3 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும் என்றும் பணிகளை நெடுஞ்சாலைத் துறையும் தேசிய வேளாண்மை, கிராம மேம்பாட்டு வங்கியும் மேற்கொள்ளும் என்றும் அரசாங்க அறிவிப்பு தெரிவித்தது.

ரூ.200 கோடி வர்த்தகம் பாதிப்பு

திருப்பூர்: நூல் விலை உயர்வுக்கு எதிராக திருப்பூரில் நேற்று பின்னலாடை மற்றும் அதனைச் சார்ந்த நிறுவனங்கள் முற்றிலும் அடைக்கப்பட்டன.

ஐந்து லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் 200 கோடி ரூபாய் வர்த்தகத்துக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவித்தன.

கோடநாடு விசாரணை ஒத்திவைப்பு

உதகை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணை டிசம்பர் 23ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. உதகை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.

குற்றஞ்சாட்டப்பட்ட சையான், வாளையார் மனோஜ் ஆகியோர் நேற்றைய விசாரணையில் நீதிமன்றத்தில் முன்னிலையானார்கள்.

38,800 பெண்களுக்கு ஆடுகள்

சென்னை: ஏழ்மை நிலையில் உள்ள, கணவனை இழந்த, கைவிடப்பட்ட, ஆதரவற்ற 38,800 பெண்களுக்கு ரூ.73.65 கோடி நிதி ஒதுக்கீட்டில் ஒருவருக்குத் தலா ஐந்து செம்மறி ஆடுகள் அல்லது வெள்ளாடுகள் என்ற கணக்கில் மொத்தம் 194,000 ஆடுகள் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அறிவித்தார்.

தகுதி வாய்ந்த பயனாளர்களைத் தேர்ந்தெடுக்கவும் ஆடுகள் முறைப்படி வழங்கப்படுவதைக் கண்காணிக்கவும் கால்நடைத்துறையின் துணை இயக்குநர் தலைமையில் குழு ஒன்றை அமைக்கவும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.