சென்னை: தமிழகத்தில் வெள்ள நிவாரணப் பணிகளும் மழை வெள்ளத்தில் இருந்து மக்களைப் பாதுகாப்பாக மீட்கும் நடவடிக்கைகளும் துரிதகதியில் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத் தில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் ெசய்தியாளர்களிடம் பேசினார்.
"வடகிழக்குப் பருவமழையால் மாநிலம் முழுவதும் இதுவரை 105 பேர் பலியாகி உள்ளனர். அத்துடன், 2,943 கால்நடைகள் இறந்துள்ளன. மொத்தம் 1,814 குடிசைகளும் 310 வீடுகளும் சேதம் அடைந்துள்ளன," என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் கடந்த அக்டோபர் 25ஆம் தேதி முதல் வழக்கத்திற்கு மாறாக கனமழை விடாது பெய்து வருகிறது என்றார்.
கடந்த 24 மணிநேரத்தில் செங்கல்பட்டு, மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், சென்னை, ராமநாதபுரம் மாவட்டங்களில் அதிக மழை பெய்துள்ளது.
அதிகபட்சமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 53.81 மி.மீட்டரும் மயிலாடுதுறையில் 51.88 மி.மீட்டரும் திருவாரூரில் 41.70 மி.மீட்டரும் சென்னையில் 40.09 மி.மீட்டரும் மழை பதிவாகியுள்ளன.
வடகிழக்குப் பருவமழை இயல்பை விட 76% கூடுதலாகப் பெய்துள்ளது.
மாநிலம் முழுவதும் 188 நிவாரண முகாம்களில் 15,016 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். சென்னை யில் உள்ள ஏழு நிவாரண முகாம்களில் 1,048 பேர் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.
ரூ.15.9 கோடி நிவாரணம்
"மழையால் உயிரிழந்தோரில் 59 பேரின் குடும்பங்களுக்கு ரூ.2.36 கோடியும் காயமடைந்த 13 பேருக்கு 55,900 ரூபாயும் நிவாரணமாக வழங்கப்பட்டு உள்ளது.
"அத்துடன், 2,943 கால்நடைகளை இழந்தவர்களுக்கு 3.43 கோடி ரூபாய்; குடிசைகளை இழந்த 24 ஆயிரத்து 810 பேருக்கு 10.1 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை ரூ.15.9 கோடி நிவாரணமாக மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது," என்று அமைச்சர் ராமச்சந்திரன் கூறினார்.