செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
b094f2c4-e5c0-464d-98bf-fabb5f013fda
-

ஒரே இரவில் 14 வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளை

திருச்சி: திருச்சி மாவட்டம், மணச்சநல்லூர் அருகே உள்ள மணியங்குறிச்சியில் ஒரே இரவில் 14 வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

இந்த வீடுகளில் இருந்து ஏறக்குறைய 9 சவரன் தங்க நகை, ரூ.25,000 பணம், இரண்டு மோட்டார் பைக்குளை கொள்ளை அடித்துச் சென்றுள்ள நிலையில், கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது கும்பலா அல்லது தனி ஒருவனா என போலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

வேலூரில் 3.6 ரிக்டர் நில அதிர்வு

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் நேற்று அதிகாலை 3.6 ரிக்டர் அளவில் நில அதிர்வு உணரப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

மாவட்டத்தின் மேற்கு, தென்மேற்குப் பகுதியில் பூமிக்கு அடியில் 25 கிலோ மீட்டர் ஆழத்தில் நில நடுக்கம் ஏற்பட்டதால் பெரிய அளவில் பாதிப்பு ஏதுமில்லை என தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே, கனமழையால் வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் நேற்று விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டார்.

16 லட்சம் பேருக்குத் தடுப்பூசி

சென்னை: தமிழகத்தில் தடுப்பூசி முகாம் வாரம் இருமுறை வியாழன், ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது. 100% மக்களும் தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்னணி மாநிலமாக தமிழகத்தை விளங்கச் செய்ய தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள் முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.

அதன்படி, ஞாயிறன்று 50,000 மையங்களில் நடத்தப்பட்ட தடுப்பூசி முகாம்களில் 16 லட்சத்து 5,293 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டதாக தகவல்கள் குறிப்பிட்டுள்ளன. 

தமிழகத்தில் இதுவரை 78.35% பேர் முதல் தவணை தடுப்பூசியும் 43.86% பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் போட்டுள்ளனர் என்று சுகாதாரத் துைற அதிகாரிகள் கூறியுள்ளனர்.

நீதிபதிகள்: அடிப்படை வசதிகளை அரசே செய்துதர வேண்டும்

சென்னை: பள்ளியில் அடிப்படை வசதி என்பது மிக முக்கியமானது எனவும் இந்த விஷயத்தில் அரசே அதிக அக்கறை எடுத்துக் கவனிக்கவேண்டும் எனவும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

புதுக்கோட்டை கறம்பக்குடி அருகே ஆதிதிராவிடர் நல பள்ளியில் அடிப்படை வசதிகள் கோரிய வழக்கு தொடர்பில் பள்ளியின் ஆய்வகம், கழிவறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நான்கு வாரத்தில் பள்ளிக்குச் செய்துதர வேண்டும் எனவும் நீதிபதிகள் கூறினர்.