சென்னை: தெற்கு அந்தமான் வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது புயலாக மாறும் வாய்ப்புள்ள தாகவும் இது வடக்கு ஆந்திரம், தெற்கு ஒடிசா இடையே கரையைக் கடக்கும் என்றும் இம்மையம் முன்னுரைத்துள்ளது.
ஆனால், இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியினால் தமிழகத்திற்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது என்றும் சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
குமரிக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் பெரும் பாலான மாவட்டங்களிலும் கடந்த சில நாள்களாகவே பரவலாக மழை பெய்து வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரி வித்துள்ளது.
இந்த மழை தமிழகத்தில் டிசம்பர் 3ஆம் தேதிவரை நீடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மழைக்கு வாய்ப்பு இல்லை என இந்திய வானிலை மையமும் தமிழகத்தில் இனி வரும் நாள்களில் மழை படிப்படியாகக் குறையத் துவங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையமும் தெரி வித்துள்ளன.
இதற்கிடையே, சென்னையில் அவ்வப்போது மழை பெய்வதால் தண்ணீரை அகற்றிய இடத்தில் மீண்டும் தண்ணீர் சூழும் நிலை உள்ளது. இதனால், தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணி சவாலாகி உள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதி காரிகள் கூறுகையில், "மண்டலத்தில் 69 மின் மோட்டார்கள் மூலம் மழைநீரை வெளியேற்றி வருகிறோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு முகாம்களில் உதவிகளும் வழங்கப்படுகிறது," என்றனர்.
இதற்கிடைேய, பல மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் விடுமுறை அறிவித்து இருந்தன.
முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை, செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பில் உள்ள பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டு, ஆய்வு செய்து சீரமைப்புப் பணிகள், சாலைகளில் தேங்கியுள்ள நீரை உடனடியாக வெளியேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

