செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
ec15f875-8661-4a20-8f36-f2b89d806e6f
மழைநீர் அருவிபோல் கொட்டுகிறது. எனினும், நிரம்பாமல் எப்போதும் போல் குறை கிணறாகவே உள்ளது.படம்: ஊடகம் -

உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டி

சென்னை: தமிழகத்தில் நடைபெற உள்ள நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் தலைவா் விஜயகாந்த் அறிவித்துள்ளாா்.

தேமுதிக சாா்பில் போட்டியிட விரும்பும் நிா்வாகிகளும் தொண்டா்களும் தோ்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களை டிசம்பா் 1 முதல் 7ஆம் தேதிவரை அந்தந்த மாவட்டத் தலைமை அலுவலகத்திலும் பெற்று, பூா்த்தி செய்து ஒப்படைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மக்களை அதிசயிக்க வைக்கும் நீர் நிரம்பாத ஆழக் கிணறு

திருநெல்வேலி: தமிழகத்தில் பெய்த தொடர் மழையால் ஏரிகள், குளங்கள், கண்மாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் யாவும் நிரம்பி வழிகின்றன. ஆனால், நெல்லை மாவட்டம் அருகே எவ்வளவு தண்ணீர் கொட்டினாலும் அவற்றை உள்வாங்கிக்கொண்டு இன்னும் நிரம்பாத நிலையில் ஓர் அதிசயக் கிணறு மக்களை ஆச்சரியப்படுத்தி வருகிறது.

நெல்லை, திசையன்விளை அருகே உள்ள இந்தக் கிணற்றை மாவட்ட ஆட்சியர், அதிகாரிகளுடன் வந்து சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு நேரில் பார்வையிட்டார்.

அங்குள்ள விவசாயிகள், வண்ணப் பூக்கள், சிறுசிறு பாசிகளை அந்தக் கிணற்றுக்குள் போட்டு அவை எங்கே செல்கிறது என சோதித்துப் பார்த்ததாகவும் சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விவசாயக் கிணறுகளில் அவை மிதந்ததாகவும் கூறுகின்றனர்.

அபாயகரமான பகுதிகளாக ஒன்பது இடங்கள் அறிவிப்பு

சென்னை: தொடர்மழை பெய்யும் ஒவ்வொரு காலகட்டத்திலும் திரும்பத் திரும்ப மழைநீர் தேங்கக்கூடிய இடமாகவும் அபாயகரமான பகுதியாகவும் உள்ள ஒன்பது இடங்களை அடையாளம் கண்டு அறிவித்துள்ளது சென்னை மாநகராட்சி. சென்னையில் உள்ள தியாகராய நகர் பசுல்லா சாலை, மேற்கு மாம்பலம், கே.கே.நகர், அசோக் நகர், ராஜமன்னார் சாலை, சீதம்மாள் நகர், ஜவஹர் நகர், புளியந்தோப்பு, பள்ளிக்கரணை செட்டிநாடு என்கிளேவ் போன்றவையே எப்போதும் நீர் தேங்கும் அபாயகரமான பகுதிகளின் பட்டியலில் உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

காஃபி போடும் கருவியில் கடத்தி வந்த ரூ.1 கோடி தங்கம் பறிமுதல்

ஆலந்தூர்: சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் அபுதாபியில் இருந்து வந்திறங்கிய ராமநாதபுரத்தைச் சேர்ந்த 24 வயது வாலிபரின் உடைமைகளைச் சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை போட்டனர். அப்போது, காஃபி போடும் கருவியை அவர்கள் பிரித்துப் பார்த்தபோது, அதற்குள் சிலிண்டர் வடிவில் ரூ.1 கோடியே 12 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 590 கிராம் தங்கக் கட்டியை மறைத்து வைத்து அவர் கடத்தி வந்ததைக் கண்டுபிடித்தனர். வாலிபரை கைது செய்த அதிகாரிகள், அவரிடம் விசாரித்து வருகின்றனர்.

சென்னையைவிட நாகப்பட்டினம், காரைக்காலில் மழை அதிகம்

காரைக்கால்: இந்த பருவமழை காலத்தில், சென்னையில் மழைநீர் வழிந்தோட வழியின்றி பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், சென்னையில்தான் அதிக அளவில் மழை பெய்துள்ளதுபோல் தகவல் பரவுகிறது. ஆனால், வானிலை ஆய்வு மைய புள்ளி விவரங்களின்படி, யூனியன் பிரதேசமான புதுச்சேரி, காரைக்கால், நாகையில்தான் அதிக மழை பதிவாகி உள்ளது. இந்த பருவமழை காலத்தில் இதுவரை மயிலாடுதுறை 102; கடலுார் 108; விழுப்புரம் 110; செங்கல்பட்டு 111; சென்னை 113; நாகை 114; காரைக்கால் 144; புதுச்சேரி 141 என எட்டு மாவட்டங்களில் 100 செ.மீ.க்கு மேல் மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக காரைக்காலில் 144; இரண்டாவதாக புதுச்சேரியில் 141; மூன்றாவதாக நாகையில் 114 செ.மீ. மழை பெய்துள்ளது.