அமைச்சர்: மாநிலம் முழுவதும் 8,075 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன
மதுரை: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதை அடுத்து ஐந்து மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அண்மைய சில தினங்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்தது. இதனால் மாநிலம் முழுவதும் உள்ள அணைகள், ஏரிகள், குளங்கள், குட்டைகள் பெரும்பாலானவை நிரம்பி உள்ளன.
பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாலும், குடியிருப்புப் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததாலும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
தமிழகத்ததில் மொத்தம் 14,138 ஏரிகள் உள்ளன. அவற்றுள்ள 8,075 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டிஉள்ளதாக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள 90 நீர்த்தேக்கங்களின் மொத்த கொள்ளளவான 224.297 டிஎம்சியில் 209.945 டிஎம்சி இருப்பு உள்ளது என்றும் இது 93.60 விழுக்காடு என்றும் அவர் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக விளங்கி வரும் இந்த அணை தற்போது முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது.
தேனி மாவட்டத்தின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக வைகை அணை கடந்த ஒரே மாதத்தில் மட்டும் மூன்றாவது முறையாக நிரம்பி உள்ளது. அணையின் நீர்மட்டம் 70 அடியை எட்டியதையடுத்து, அணைக்கு வரும் உபரி நீர் திறந்துவிடப்பட்டது.
வைகை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான வெள்ளிமலை, வருசநாடு, மேகமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு தொடர்ந்து நீடித்த கனமழை காரணமாக வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து ஐந்து மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதற்கிடையே தாமிரபரணி ஆற்றில் வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடி பெருக்கெடுத்து ஓடுவதால் அதன் நீர்ப்பாதையில் உள்ள தரைப்பாலங்கள் பலவும் மூழ்கியுள்ளன. இதனால் மேலநத்தம், சீவலப்பேரி உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து முடங்கியது.
தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் பெய்த கனமழை காரணமாக மூன்று வீடுகள் இடிந்து விழுந்தன. இதில் உயிரிழப்பு ஏதும் இல்லை.
காஞ்சிபுரத்தில் வேகவதி ஆற்றில் நள்ளிரவில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கரையோரப் பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து ஏரிகளும் நிரம்பிவிட்டன.
செங்கல்பட்டு மாவட்டத்தில், பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 528 ஏரிகள் முழுவதுமாக நிரம்பியுள்ளன.
காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், அத்தியாவசியப் பொருள்களை வாங்க மக்கள் இடுப்பளவு தண்ணீரில் நடமாட வேண்டியுள்ளது.
மதுரையில் பெய்த மழையால் ஆட்சியர் அலுவலகம், அரசு மருத்துவமனையை மழை நீர் சூழ்ந்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் தவிப்புக்கு ஆளாகி உள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

