சென்னை: அதிமுகவில் கட்சி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய இருவரையும் இனி கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்க உள்ளனர். கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் இது தொடர்பான சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கிடையே, முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மேலும், கட்சியின் தற்காலிக அவைத்தலைவராக தமிழ் மகன் உசேன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அதிரடி மாற்றங்களால் கட்சியினர் மத்தியில் சலசலப்பும் பரபரப்பும் நிலவுகிறது.
அதிமுக செயற்குழுக் கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது 11 முக்கிய தீர்மானங்களுடன் ஒரு சிறப்புத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. அதிமுக பொன்விழாவை எழுச்சியுடன் கொண்டாட தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்தும் திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் இருவேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட பின்னர், கட்சியின் சட்ட விதிகளில் மூன்று திருத்தங்களை மேற்கொள்ள சிறப்புத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி, இனிமேல் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய இருவரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள்தான் தேர்ந்தெடுப்பர்.
இதற்காக வாக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே கட்சிக் கொள்கைளுக்கு எதிராகச் செயல்பட்டதாகக் கூறி, முன்னாள் அமைச்சரும் எம்பியுமான அன்வர் ராஜா அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஒருமையில் குறிப்பிட்டு கடுமையாக விமர்சித்த காரணத்தால் அவர் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.