சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார் சசிகலா. அப்போது அவர் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிடுவார் எனக் கூறப்படுகிறது.
அதிமுகவில் உட்கட்சிப் பூசல் வெடித்துள்ள நிலையில், சசிகலா அடுத்தடுத்து மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், அதிமுகவில் உள்ள தமது ஆதரவாளர்களுடன் பேசியது, மழைக்காலத்தில் பொதுமக்களை சந்தித்து ஆறுதல் கூறியது என்று அரசியல் களத்தில் காய்களை நகர்த்தி வரும் சசிகலா, அதிமுக தலைமை குறித்தும் அவ்வப்போது மறைமுகமாக விமர்சித்து வருகிறார்.
இந்நிலையில், ஜெயலலிதா மக்களின் இதயங்களில் இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதாக அறிக்கை ஒன்றில் குறிப்பிட்ட அவர், ஜெயலலிதாவின் நினைவு நாளன்று ஏதேனும் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

