சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வு உள்ளிட்ட பேட்டித் தேர்வுகளில் தமிழ் மொழித் தேர்வு கட்டாயம் என அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மற்றும் தமிழக அரசு நடத்தும் தேர்வுகளை இந்தியா முழுவதும் உள்ளவர்கள் மற்றும் நேப்பாளம், பூட்டான் ஆகிய வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும் எழுத விண்ணப்பிக்கலாம் என ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு 2016 ஆம் ஆண்டு சட்டத்திருத்தம் செய்திருந்தது.
அதன்படி தமிழக அரசுப் பணிகளில் வெளி மாநிலத்தவர்களும் சேரலாம் என்ற நிலை ஏற்பட்டது.
இது தமிழக இளையர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் செயல் என்று அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளைத் தவிர பெரும்பான்மையான அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், திமுக அரசு பதவி ஏற்ற பின்னர் செப்டம்பர் 13ஆம் தேதி தமிழக சட்டபேரவையில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனி வேல் தியாகராஜன் ஓர் அறிவிப்பை வெளியிட்டார்.
"தமிழ்நாடு அரசுத்துறைகளில் உள்ள பணியிடங்கள் மற்றும் மாநில பொதுத்துறை நிறுவனங்களிலுள்ள பணியிடங்கள் அனைத்திலும் 100 விழுக்காடு தமிழக இளைஞர்களை நியமனம் செய்யும் வகையில் எல்லாப் போட்டித் தேர்வுகளிலும் தமிழ்மொழித்தாள் தகுதித்தேர்வாக நடத்தப்படும்," என்னும் அவரது அறிவிப்புக்குப் பலரும் வரவேற்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், இந்த அறிவிப்பு நேற்று அரசாணையாக வெளியிடப்பட்டது.
இதன்படி, டிஎன்பிஎஸ்சி நடத்தும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழித் தாள் கட்டாயம் இடம்பெறும்.
தகுதித்தேர்வுக்கான பாடத்திட்டம் 10ஆம் வகுப்பு நிலையில் இருக்கும். கட்டாய தமிழ்த் தாள் தேர்வில் குறைந்தபட்சம் 40 மதிப்பெண்கள் பெற வேண்டும். குறைந்தபட்ச மதிப்பெண் பெறாதவர்களின் பிற தாள்கள் திருத்தப்படாது.
தற்போது நடைமுறையிலுள்ள பொதுத் தமிழ்/பொது ஆங்கிலம் உள்ள தேர்வுகளில் பொது ஆங்கிலம் தாள் தேர்வு நீக்கப்பட்டு பொதுத் தமிழ் மட்டுமே மதிப்பீட்டுத் தேர்வாக இருக்கும்.
இந்த அரசாணைக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிப் பிரமுகர்களும் தமிழ்மொழி ஆர்வலர்களும் வரவேற்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டு வருகின்றனர்.

