தமிழகத்தின் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த வசந்த் என்ற கல்லூரி மாணவர், ஆடுகள்மீது மோதி மூச்சு, பேச்சின்றி உயிருக்கு ஆபத்தான நிலையில் சாலையில் விழுந்து கிடந்தார்.
மன்னார்குடி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் வனஜா என்ற தாதி, அப்போது அவ்வழியாக காரில் சென்றுகொண்டிருந்தார்.
இளையர் விழுந்து கிடந்ததைக் கண்ட அவர், உடனடியாக காரை நிறுத்தி, அருகில் சென்று இளையரைப் பரிசோதனை செய்தார். அப்போது அவரது நாடித் துடிப்பு நின்று ஆபத்தான நிலையில் அவர் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, 'சிபிஆர்' என சொல்லப்படும் இதய இயக்க மீட்பு சிகிச்சையை அந்த 20 வயது இளையருக்கு வனஜா அளித்தார்.
இதனால், மீண்டும் அந்த இளையரின் இதயத்துடிப்பும் நாடித்துடிப்பும் சீரானது. இளையருக்கு சுயநினைவும் திரும்பியது.
அதன்பிறகு, அவசர மருத்துவ வாகனத்தில் அந்த இளையர் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அவரின் உயிரைக் காப்பாற்றிய வனஜாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

