மன்னார்குடி: மன்னார்குடி அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த வசந்த் என்ற கல்லூரி மாணவர், ஆடுகளின் மீது மோதி மூச்சு, பேச்சு இன்றி உயிருக்கு ஆபத்தான நிலையில் சாலையில் விழுந்து கிடந்துள்ளார்.
அப்போது, அவ்வழியாக மன்னார்குடி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் வனஜா என்ற தாதி காரில் சென்றுகொண்டிருந்தார்.
இளையர் விழுந்து கிடப்பதைக் கண்டவர், உடனடியாக காரை நிறுத்தி, அருகில் சென்று இளைஞரைப் பரிசோதனை செய்தார். அப்போது அவரது நாடித் துடிப்பு நின்று ஆபத்தான நிலையில் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, சிபிஆர் என சொல்லப்படும் மார்பின் மீது இரு கைகளையும் சேர்த்து வைத்து அழுத்தி முதலுதவி சிகிச்சை அளித்துள்ளார்.
இதனால், மீண்டும் அந்த இளைஞரின் இதயத்துடிப்பும் நாடித்துடிப்பும் சீரானது. இளைஞருக்கு சுயநினைவும் திரும்பியது. மாணவரின் உயிரைக் காப்பாற்றிய தாதிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
அதன்பிறகு, அவசர சிகிச்சை வாகனம் மூலம் மாணவர் வசந்த் மேல் சிசிக்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

