சென்னை: சென்னை அைனத்துலக விமான நிலையத்தில் ஓமிக்ரான் பரிசோதனைக்காகக் காத்திருக்கும் பயணிகளுக்காக கூடுதல் வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. அத்துடன், அவர்கள் காத்திருக்கும் நேரமும் இப்போது குறைக்கப்பட்டுள்ளதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
உருமாறிய புதிய வகை கொரோனாவான ஓமிக்ரான், தமிழகத்திற்குள் நுழைந்து விடக்கூடாது என்பதில் மாநில அரசு அதிக அக்கறை காட்டி வருகிறது.
இந்த நிலைப்பாட்டில் உறுதியாக உள்ள சுகாதார அதிகாரிகளும் விமான நிலைய அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இதுவரை சென்னை விமான நிலையத்தில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்துகொள்ள ஆறு முதல் ஏழு மணி வரையிலும் ரேபிட் பரிசோதனை செய்து கொள்ள ஒரு மணி நேரம் வரையிலும் பயணிகள் காத்திருக்கும் நிலை இருந்துவந்தது. இதனால் பயணிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர்.
இந்நிலையில், இந்தக் காத்திருப்பு நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஆா்டி-பிசிஆா் பரி சோதனைக்கு ஐந்து முதல் ஆறு மணி நேரமும் ரேபிட் பரிசோதனைக்கு 30 முதல் 45 நிமிடமும் மாற்று உள்நாட்டு விமானங்களில் செல்லக்கூடிய பயணிகளுக்கு 20 நிமிடங்களிலும் சோதனை முடிவு கள் கிடைப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதோடு குடியுரிமை, சுங்கச்சோதனை பிரிவுகளிலும் கூடுதல் 'கவுண்டர்கள்' திறக்கப்பட்டு, பயணிகள் தாமதமில்லாமல் மருத்துவப் பரிசோதனைப் பகுதிக்கு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அத்துடன், காபி, சிற்றுண்டி போன்றவற்றை நியாயமான விலையில் விற்பனை செய்யவும் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இலவச தொலைபேசி வசதிகள், பாலூட்டும் தாய்மார்களுக்குத் தனி அறை, வைஃபை, தொலைக்காட்சி, வெளிநாட்டுப் பணத்தை மாற்றிக் கொள்வதற்கான வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன.
ஒரு நாளில் 700 முதல் 800 பயணிகளுக்குச் சோதனைகள் நடத்தப்படுகின்றன. பயணிகளுக்கு இன்னும் பல வசதிகளைச் செய்து தரவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

