நாகர்கோவில்: திருநெல்வேலி பேருந்தில் ஏறிய நரிக்குறவ இன மக்கள் சத்தம் போட்டபடி பேசிக் கொண்டு வந்ததால், அவர்களை நடுவழியிலேயே இறக்கிவிட்ட பேருந்து ஓட்டுநரையும் நடத்துநரையும் இடைநீக்கம் செய்து போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பொதுவாக நரிக்குறவ இன மக்கள் தங்கள் வாழ்வாதாரமாக ஊசி, பாசி, நரிப்பல், சவுரி முடி விற்பனையை செய்துவருவது வழக்கம். இதுபோல் இவர்கள் நாகர் கோவில் பேருந்து நிலையத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஊசி, பாசி விற்பனை செய்துவிட்டு, மாலை நேரத்தில் நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் பேருந்தில் இவர்கள் வசிக்கும் வள்ளியூர் பகுதிக்குச் சென்று கொண்டு இருந்துள்ளனர்.
அப்போது, அவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டபடி, சத்தமாக பேசிக் கொண்டிருந்ததாகக் கூறப் படுகிறது. இதைக்கண்ட இதர பயணிகள் முகம் சுழித்து, அவர்களை இறக்கி விடும்படி நடத்துநரிடம் கோரியுள்ளனர்.
இதையடுத்து, நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு வயதான ஆண், ஒரு பெண், ஒரு குழந்தை ஆகியோர் நடுவழியில் அவர்களது உடமைகளுடன் கீழே இறக்கிவிடப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் காணொளியாக சமூக வலைத்தளத்தில் பரவ, இதற்கு கண்டனக் குரல்கள் வலுத்து வருகின்றன.
அண்மையில், குமரியில் மீன் விற்கும் செல்வமேரி என்ற மூதாட்டியை பேருந்தில் இருந்து இறக்கி விட்டனர்.
இந்தச் சம்பவத்துக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், பேருந்து ஓட்டுநரும் நடத்துநரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இதேபோன்ற மற்றொரு சம்பவம் இப்போது நடந்துள்ள நிலையில், அரசு அலுவலர்களே இம்மாதிரியான செயல்களில் ஈடுபடுவது கவலை தருவதாக திமுக எம்.பி. கனிமொழி வேதனை தெரிவித்துள்ளார்.

