செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
dd603e6d-0f16-4d05-a1fa-456c074d1857
-

வேதா இல்ல சாவியை தீபா, தீபக்கிடம் ஒப்படைத்த ஆட்சியர்

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசுைடமை ஆக்கியது செல்லாது, வாரிசுதாரர்களிடம் அந்த இல்லத்தின் சாவியை ஒப்படைக்கவேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, வீட்டின் சாவியை தங்களிடம் ஒப்படைக்கும்படி சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயாராணியிடம் ஜெ.தீபாவும் ஜெ.தீபக்கும் அண்மையில் மனு அளித்திருந்தனர். இந்நிலையில் வேதா இல்லத்தின் சாவி தீபா, தீபக்கிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.

கல்லூரி மாணவிக்கு தொல்லை கொடுத்த நடத்துநர், ஓட்டுநர் கைது

விழுப்புரம்: அரசுப் பேருந்தில் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கொத்தமங்கலம் பகுதிக்கு இரவு நேரத்தில் 20 வயது கல்லூரி மாணவி ஒருவர் பயணம் செய்துகொண்டு இருந்துள்ளார். அப்போது பேருந்து சென்று கொண்டிருக்கும்போது, மாணவிக்கு நடத்துநர் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்பட்ட புகாரை அடுத்து நடத்துநர் சிலம்பரசனை காவல்துறை அதிகாரி கள் நேற்று கைது செய்தனர். இதுகுறித்து ஓட்டுநர் அருள்செல்வனிடம் விசாரித்து வந்த நிலையில், அவரும் கைது செய்யப்பட்டதாக காவலர்கள் கூறினர்.

வெங்கடாசலம் உயிரிழப்பு குறித்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

சென்னை: தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் உயிரை மாய்த்துக்கொண்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

'தமிழில் அர்ச்சனை செய்ய

போதுமான அர்ச்சகர்கள் உள்ளனர்'

சென்னை: தமிழில் அர்ச்சனை செய்வதற்கு தோதாக அனைத்துக் கோயில்களிலும் போதுமான அளவில் அர்ச்சகர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து உள்ளார். கோயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவசத் திருமணத் திட்டத்தின்கீழ் சென்னையில் ஒரு திருமணமும் திருவண்ணாமலையில் ஒரு திருமணமும் நடந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இன்று 14வது தடுப்பூசி முகாம்

சென்னை: தமிழகத்தில் இன்று 14வது மெகா தடுப்பூசி முகாமை 50,000 மையங்களில் நடத்த சுகாதாரத்துறை ஏற்பாடு செய்துள்ளது. இப்பணியில் இரண்டு லட்சம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். "தடுப்பூசி போட்டுக்கொண்டால் கொரோனா உயிரிழப்பில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும். அதனால் தகுதியுள்ள அனைவரும் உடனே தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்," என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.