தர்மபுரி: தாலிகட்ட வேண்டிய நேரத்தில் மாப்பிள்ளை மதுபோதை யுடன் தள்ளாடிய நிலையில் இருந்ததால், மணமகள் தான் அணிந்திருந்த மாலையைக் கழற்றி வீசி திருமணத்தை நிறுத்தியுள்ளார்.
"கல்யாணத்துக்கு முன்பே இப்படி என்றால், போகப் போக இந்த திருமணம் விவாகரத்தில்தான் முடியும்," என்றும் மணமகள் கூறியுள்ளார்.
தர்மபுரி மாவட்டம், தொட்டப்படகாண்டஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன், 32. கூலித் தொழிலாளியான இவருக்கும் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமி, 22, என்ற பெண்ணுக்கும் திருமணம் பேசி நிச்ச யிக்கப்பட்டது.
அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டம், வஜ்ஜிரபள்ளம் கிராமத்தில் உள்ள ஈஸ்வரன் கோவிலில் நடைபெற இருந்த திருமணத்துக்கு பெண் வீட்டார் அலங்காரத்துடன் பேருந்தில் வந்து இறங்கினர்.
ஆனால், அங்கு மணமகன் வீட்டார் யாரும் இல்லாததை அடுத்து, உடனே மாப்பிள்ளை வீட்டுக்கு அனைவரும் சென்றனர்.
அங்கு மணமகன் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்ற நிதானமின்றி மதுபோதையில் மயக் கத்துடன் இருந்ததைக் கண்டு அனைவரும் அதிர்ந்தனர்.
இதைத்தொடர்ந்து மணமகளின் உறவினர்கள் மாரண்டஹள்ளி காவல்நிலையத்தில் திருமணத்துக்கு ஆன செலவுத் தொகையை மணமகன் வீட்டாரிடம் வாங்கித் தரும்படி புகார் அளித்தனர்.
இந்நிலையில், மணமகன் சரவணன் "இனிமேல் குடிக்க மாட்டேன், பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறேன்," என காவல் நிலையத்தில் கெஞ்சியுள்ளார். ஆனால், மணப்பெண் லட்சுமி, "மாப்பிள்ளையும் வேண்டாம், திரு மணமும் வேண்டாம்," என பிடிவாதமாக மறுத்துவிட்டு அங்கிருந்து தனது உறவினர்களுடன் வீட்டுக்கு நடையைக் கட்டினார்.

