தூத்துக்குடி: மகாகவி சுப்பிரமணிய பாரதியார் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள (அன்றைய திருநெல்வேலி மாவட்டம்) எட்டயபுரத்தில் 1882ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி பிறந்தார். நேற்றைய இந்த நாளில் பாரதியாரின் 139வது பிறந்தநாள் உலகமெங்கும் கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு தலைவர்கள் பலரும் ஆங்காங்கே பாரதியாருக்கு மாலைசூட்டி, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாரதியாரின் உருவச்சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அமித் ஷா தமிழில் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "பாரதத் தாயின் புதல்வன் மகாகவி சுப்பிரமணிய பாரதியின் ஜெயந்திக்கு எனது அஞ்சலி.
"பெண்கள் அதிகாரம் பெறுவதற்கான ஒரு முன்னோடி இவர்," என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், எட்டயபுரத்தில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ், கீதாஜீவன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
முதல்வர் மு.க.ஸ்டாலினும் டுவிட் செய்துள்ளார். அதில், "நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா! திறம்பாட வந்த மறவன்! அறம்பாட வந்த அறிஞன்! படரும் சாதிப் படைக்கு மருந்தாம் மகாகவி பாரதியாரின் 139வது பிறந்தநாள் இன்று!
"தமிழுக்குத் தொண்டுசெய்த அப்பைந்தமிழ்த் தேர்ப்பாகனின் நினைவைப் போற்றிடும் நமது அரசின் முயற்சிகள் என்றும் தொடர்ந்திடும்!," என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல், யாழ்ப்பாணம் நல்லூர் அரசடி தெருவில் அமைந்துள்ள பாரதியாரின் திருவுருவச் சிலைக்கு இந்திய துணைத் தூதர் ராகேஷ் நட்ராஜ் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அத்துடன், மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் திருவுருவச் சிலையை யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பகுதியில் மறவன்புலவு சச்சிதானந்தன் திறந்துவைத்தார்.

