மூங்கில் காட்டில் தொப்புள்
கொடியுடன் கிடந்த ஆண் குழந்தை
சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள திருமயிலாடி கிராமப் பகுதியில் உள்ள மூங்கில் காட்டில் இருந்து குழந்தை வீறிட்டு அழும் சத்தத்தைக் கேட்டு மனோஜ் என்பவர் அருகில் சென்று பார்த்துள்ளார். அங்கு தொப்புள் கொடியுடன் பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை ஒன்று அரவணைக்க யாருமின்றி அனாதையாகக் கிடந்தது. மனோஜ் குழந்தையை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். இதுகுறித்து கொள்ளிடம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
நடிகர் சூர்யா மீது மீண்டும் புகார்
சென்னை: அண்மையில்தான் 'ஜெய்பீம்' பட விவகாரம் சூடுபிடித்து தணிந்தது. இப்போது மீண்டும் இவ்விவகாரம் தலையெடுத்துள்ளது. குறவர் சமூகத்தை இழிவுபடுத்தி விட்டதாக கும்பகோணத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவர் நடிகர் சூர்யா மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
குறவர் மக்கள் நல சங்கத்தின் தலைவரான இவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்துள்ள புகாரில், "நடிகர் சூர்யா தயாரித்து, நடித்துள்ள 'ஜெய்பீம்' படத்தில் குறவர் சமூகத்தை இழிவுபடுத்தும் காட்சிகள் உள்ளன. அவற்றை நீக்கவேண்டும். நடிகர் சூர்யா, இயக்குநர் ஞானவேல் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்," என்று புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த்தாய் வாழ்த்து; தேசிய கீதத்தைப் பாடும்படி உத்தரவு
சென்னை: அரசு விழாக்ககளை நடத்துவோர் இனிவரும் காலங்களில் தமிழ்த்தாய் வாழ்த்தையும் தேசிய கீதத்தையும் பயிற்சி பெற்றவர்களைக் கொண்டு பாடவைக்க வேண்டுமே தவிர இசைக்கருவிகளைக் கொண்டு ஒலிபரப்பக் கூடாது என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் ஆகியவை ஒலிப்பதிவுகள் வாயிலாக இசைக்கப்படுவதால் விழாவில் பங்கேற்போர் அவை இசைக்கும்போது உதட்டளவில் கூட பாடுவதில்லை. தமிழ்த்தாய் வாழ்த்தும் தேசிய கீதமும் இசைக்கப்படுவதற்கான நோக்கம் சிதைந்து போவது தெரியவந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
சொத்து விவரம் தாக்கல் செய்ய
ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு உத்தரவு
சென்னை: ஐஏஎஸ் அதிகாரிகள் அனைவரும் தங்களது பெயரிலும் தங்களது குடும்பத்தினர் பெயரிலும் உள்ள சொத்து விவரங்கள் அனைத்தையும் தாக்கல் செய்ய வேண்டும் என ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தலைமைச் செயலர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார். வரும் ஜனவரி மாதம் 31ஆம் தேதிக்குள் சொத்து விவரங்களை இணையத்தில் பதிவு செய்யுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.
கட்டணமில்லா திருமணம்
சென்னை: அனைத்துக் கோவில்களிலும் கோவில் திருமண மண்டபங்களிலும் கட்டணம் இல்லா திருமணத் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. மணமக்களில் ஒருவர் மாற்றுத் திறனாளியாக இருந்தாலும் அவர்களுக்கு கோவில்களில் கட்டணம் வசூலிக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூங்கில் காட்டில் தொப்புள் கொடியுடன் கிடந்த ஆண் குழந்தை மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது.
படம்: ஊடகம்

