விழுப்புரம்: அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கு போக்குவரத்துத்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடுவோர் இனி நிரந்தரப் பணிநீக்கம் செய்யப்படுவர் என்று கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
"விழுப்புரம் மாவட்டத்தில் நடை பெற்ற செயல் போக்குவரத்துக் கழகத்திற்கு மாபெரும் தலைக் குனிவை ஏற்படுத்திவிட்டது. போக்குவரத்துக் கழக வரலாற்றில் இது ஒரு கறுப்பு நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. வருங்காலத்தில் பணியாளர்கள் இதுபோன்ற செயலில் ஈடுபடக்கூடாது. மீறி ஈடுபடும் பணியாளர்கள் நிரந்தரப் பணி நீக்கம் செய்யப்படுவர்," என்று எச்சரித்துள்ளனர்.
விழுப்புரத்தில் இருந்து கொத்தமங்கலம் பகுதிக்கு அரசுப் பேருந்தில் தன்னந்தனியாக இரவில் சென்றுகொண்டிருந்த 20 வயது கல்லூரி மாணவிக்கு நடத்துநர் சிலம்பரசன், 32, பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதைக் கண்டும் காணாததும் போல் ஓட்டுநர் அருள்செல்வன், 45, இருந்துள்ளார்.
பேருந்தை நிறுத்தும்படி மாணவி கூறியும் நிறுத்தாததால், மாணவி பேருந்தில் இருந்து குதித்துள்ளார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து நடத்துநரும் ஓட்டுநரும் கைதாகினர்.
இதற்கிடையே, இவர்கள் இருவரையும் பணியிடை நீக்கம் செய்து போக்குவரத்துக் கழகப் பொது மேலாளர் உத்தர விட்டுள்ளார்.

