சென்னை: 'லோக் அதாலத்' எனும் மக்கள் நீதிமன்றத்தின் மூலம் தமிழகத்தில் 50,000 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகளை விரைவாக முடிவுக்கு கொண்டுவர ஆண்டுக்கு நான்கு முறை தேசிய அளவில் மக்கள் நீதிமன்றத்தை உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி தேசிய சட்டப்பணி ஆணைக்குழு நடத்தி வருகிறது.
இதன்படி நாடு முழுவதும் இந்த ஆண்டுக்கான 4வது தேசிய லோக் அதாலத் நடத்தப்பட்டது.
தமிழகத்தில் மாநில சட்டப் பணிகள் குழு சார்பில் மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டதாக தினத்தந்தி தகவல் தெரிவித்தது.
உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி அறிவுறுத்தலின்படி உயர்நீதிமன்ற மூத்த நீதிபதிகள் பரேஷ் உபாத்தியாய், எம்.துரைசாமி ஆகியோர் மேற்பார்வையில் இந்த லோக் அதாலத் நடந்தது.
சென்னை உயர்நீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகள் எட்டு பேர் தலைமையில் எட்டு அமர்வுகள் அமைக்கப்பட்டன.
இதுபோல மாவட்ட அளவிலும் நீதிபதிகள் தலைமையில் அமர்வுகள் அமைக்கப்பட்டன.
மொத்தத்தில் மாநிலம் முழுவதும் பணியில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் 417 அமர்வுகள் அமைக்கப்பட்டன.
இந்த நீதிபதிகள் வழக்கில் தொடர்புடைய இரு தரப்பினரையும் அழைத்து சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி வழக்குகளை விசாரித்தனர்.
காலை 10 மணிக்கு தொடங்கிய விசாரணை மாலை 6 மணிக்கு முடிவடைந்தது.
இதில் முடிவுக்கு வந்த வழக்குகளின் விவரங்கள் குறித்து தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலர் நீதிபதி ராஜசேகர் தெரிவித் தார்.
"தேசிய லோக் அதாலத்தில் காசோலை மோசடி வழக்கு, சிவில் வழக்கு, ஜீவனாம்சம் தொடர்பான குடும்ப நல வழக்கு, தொழிலாளர் வழக்கு என்று பல வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப் பட்டன. வழக்கில் தொடர்புடைய இரு தரப்பினரையும் அமரவைத்து, நீதிபதிகள் அவர்களிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி, இரு தரப்பு சம்மதத்துடன் ஏராளமான வழக்குகளை முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர்.
"மொத்தம் 57,773 வழக்குகளில் இரு தரப்பினரின் சம்மதத்துடன் தீர்வு காணப்பட்டுள்ளன.
"இதன் மூலம் வழக்கு தொடர்ந்தவர்களுக்கு 388 கோடியே 30 லட்சத்து 56 ஆயிரத்து 722 ரூபாய் கிடைத்துள்ளது," என்றும் நீதிபதி ராஜசேகர் தெரிவித்தார்.