திருவள்ளூர்: தடுப்பூசி போட்ட வர்களுக்கு மட்டுமே மதுபானத்தை விற்பனை செய்யவேண்டும் என்று திருவள்ளூர் மாவட்ட 'டாஸ்மாக்' மதுக்கடை நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.
தடுப்பூசி போடாதவர்களை வணிக வளாகம், பேரங்காடிகள், கடைவீதிகள், துணிக்கடைகள் உள்ளிட்ட பொது இடங்களில் அனுமதிக்கக் கூடாது என்று சுகாதாரத் துறை ஏற்கெனவே அறிவுறுத்தி இருந்தது.
மதுரை, தேனி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட சில மாவட்டங்களில் பொது இடங்களுக்கு வருபவர்கள் தடுப்பூசி போட்டிருப்பது கட்டாய மாக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அந்தந்த மாவட்ட நிர்வாகங்களே முடிவு எடுத்து அறிவித்துள்ளன.
இந்நிலையில், தடுப்பூசி போடா தவர்களுக்கு மதுபானம் விற்கக் கூடாது என மாவட்ட மேலாளர்கள் மூலம் 'டாஸ்மாக்' ஊழியர்களுக்கு குறுந்தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்ட 'டாஸ்மாக்' மேலாளர் தனது ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள குறுந்தகவலில், "மதுபானக் கடைக்கு வரும் வாடிக்கையாளரின் தடுப்பூசி சான்றிதழைச் சரிபார்த்த பின்னரே அவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்யவேண்டும். கடையின் முகப்பில் இதுகுறித்த வாசகம் ஒட்டப்பட்டிருக்க வேண்டும். என்றும் கூறப்பட்டுள்ளது.

