சென்னை: அனைத்து அரசு உயரதிகாரிகளும் தங்களது சொத்து விவரங்களை இணையத்தில் பதிவிடுவதற்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் (படம்) வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்டிருந்த ஃபேஸ்புக் பதிவில், "தமிழகத்தில் பணியில் உள்ள அனைத்து ஐஏஎஸ் அதிகாரிகளும் தாங்கள் வாங்கிய சொத்துகள், அவர்களது உறவினர் பெயர்களில் வாங்கிய சொத்து விவரங்களை வரும் ஜனவரி 31ஆம் தேதிக்குள் இணையத்தில் பதிவிட வேண்டும் எனத் தலைமைச் செயலாளர் இறையன்பு அறிவுறுத்தியுள்ளது வரவேற்கத்தக்கது.
"இதுபோன்ற செயல்கள்தான் வெளிப்படைத் தன்மையையும் ஊழல் இல்லாத நிர்வாகத்தையும் தொடர்ந்து கொண்டுசெல்ல வழிவகுக்கும்.
"இந்த நடைமுறையை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்லும் வகையில், அனைத்து அரசு உயரதிகாரிகளும் தங்களது சொத்து விவரங்களை இணையத்தில் பதிவிட தமிழக அரசு உத்தரவிட வேண்டும்," என்றும் விஜயகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.

