சென்னை: மக்களிடையே 'வைட்டமின் டி' குறைபாடு அதிகரித்து வரும் நிலையில், மாணவா்களுக்கு பாடநேரத்தின்போது வாரா வாரம் ஐந்து முறை விளையாட்டு நேரத்தைக் கட்டாயமாக்க வேண்டும் என பாமக நிறுவனா் மருத்துவர் ராமதாஸ் தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், "லண்டனில் இருந்து வெளிவரும் 'நேச்சா் சயின்ஸ்' இதழில் வெளியாகியுள்ள கட்டுரையில் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாட்டு மக்கள் வைட்டமின் 'டி' குறைபாட்டால் எவ்வளவு மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மக்கள் தொகையில் 20%க்கும் கூடுதலானவா்கள் கடுமையான வைட்டமின் 'டி' குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அந்த இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் தகவல்களைக் கருத்தில் கொண்டு, "வைட்டமின் 'டி' குறைபாடு ஏற்படுவதைத் தடுப்பதற்காக சிறப்புத் திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும். அதன் ஒரு கட்டமாக பள்ளிகளில் வாரத்துக்கு ஐந்து பாடவேளைகளில் விளையாட்டைக் கட்டாயமாக்க வேண்டும்.
"மாலை வெயிலில் மக்கள் நடைப்பயிற்சி செய்வதற்கு ஏதுவாக பூங்காக்களும் விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் திடல்களும் அதிக எண்ணிக்கையில் அமைக்கப்பட வேண்டும். வைட்டமின் 'டி' குறைபாட்டின் தீமைகள், அதைப் போக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் ஆகியவை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்துவதற்கும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்," என்று மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

