செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
19fc65aa-7637-40bc-a50d-eecf111e61fc
-
multi-img1 of 2

ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்தே

சென்று பணியைச் செய்த ஆட்சியர்

அரியலூர்: சுற்றுச்சூழலைப் பேணிப் பாதுகாக்க வாரத்திற்கு ஒரு நாள் பொது ஊர்தி அல்லது மிதிவண்டியில் அலுவலகத்துக்கு வரவேண்டும் என தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள் விடுத்திருந்தது.

இந்நிலையில், இந்த யோசனைக்கு தானே ஒரு முன்மாதிரியாகத் திகழ விரும்பிய அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி, மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் தனது சொந்த காரைப் பயன்படுத்தி அலுவலகத்துக்கு வராமல் தனது இல்லத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அலுவலகத்திற்கு நடந்தே சென்று பணிகளைக் கவனித்துள்ளார். படம்: ஊடகம்

விபத்து குறித்து தகவல் சொன்னவர்களுக்கு ரூ.5,000 பரிசு

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து சமயத்தில், மீட்புப் பணிகளுக்கு உதவிய கிராம மக்கள், காவல்துறையினர், தீயணைப்புத் துறையினருக்குப் பாராட்டுச் சான்றிதழை ராணுவ அதிகாரி ஏ.அருண் வழங்கினார். விபத்து நடந்த இடத்திலும் அவர் ஆய்வு செய்தார். படம்: ஊடகம்

குன்னூர்: குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து குறித்து காவல் துறைக்குத் தகவல் தெரிவித்த கிருஷ்ணசாமி, குமார் ஆகியோருக்குத் தலா ரூ.5,000 பரிசை ராணுவத் தளபதி ஏ.அருண் வழங்கி பாராட்டுகளைத் தெரிவித்தார். "விபத்தில் சிக்கிய 14 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிய நீங்கள்தான் கடவுள்," எனவும் அவர் பேசினார்.

கடன் பாக்கி: பெண்ணுடன் காரை ஓட்டிச்சென்றவர்கள் மீது வழக்கு

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் கடன் பாக்கிக்காக பெண்ணுடன் சேர்த்து காரை ஓட்டிச் சென்ற தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் மீது காவல்துறை அதிகாரிகள் வழக்குப் பதிந்துள்ளனர்.

பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர் அந்தோணி காரல் மார்க்ஸ். இவர், வணிக வளாகம் நடத்திவந்த நிலையில், தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றுள்ளார். ஆனால், கொரோனா காலகட்டம் என்பதால் போதிய வருமானம் இன்றி கடனைச் செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.

இந்நிலையில், அந்தோணியின் வீட்டிற்கு வந்த ஊழியர்கள் ஏழு லட்சம் ரூபாய் கடன் பாக்கிக்காக அவரது வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த காரை ஓட்டிச் சென்றனர். அதில் அந்தோணியின் பெண் நண்பர் ஒருவர் இருந்த நிலையில் காரை ஓட்டிச் சென்றதாகவும் பெண் கீழே இறங்க முயன்றபோது அவர்கள் திட்டியதாகவும் கூறப்படுகிறது.

மனைவியைக் கடத்திய குற்றச்சாட்டு: பெற்றோர், உறவினர் நால்வர் கைது

செஞ்சி: காதல் திருமணம் செய்துகொண்ட தனது மனைவியைக் கடத்திச் சென்றுவிட்டதாக மணமகன் யுவராஜ் அளித்த புகாரை அடுத்து, பெண்ணின் பெற்றோர், உறவினர் உள்பட நால்வரை காவல் துறை அதிகாரிகள் கைது செய்தனர். செஞ்சியை அடுத்த சிங்கவரத்திலுள்ள அரங்கநாதர் திருக்கோயிலில் டிசம்பர் 9ஆம் தேதி, யுவராஜ், 29, பானுபிரியா, 24, ஆகிய இருவருக்கும் காதல் திருமணம் நடந்துள்ளது.

இந்நிலையில், பெண் வீட்டார் காதல் ஜோடியைப் பிரித்து பானுபிரியாவை அழைத்துச் சென்று, குலதெய்வக் கோயிலில் வைத்து அப்பெண்ணுக்கு முடிக் காணிக்கை செலுத்தி உள்ளனர். இதனிடையே தனது மனைவியைக் கடத்திச்சென்று மொட்டை அடித்துவிட்டதாகப் பெண்ணின் பெற்றோர், உறவினர்கள் மீது யுவராஜ் புகார் அளித்தார்.