சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மாநகராட்சி நிர்வாகம் புதிய நடவடிக்கையை எடுக்கவுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, ரூ.335 கோடி செலவில் மூன்று இடங்களில் மேம்பாலங்களைக் கட்ட மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இதன்படி, வியாசர்பாடி கணேசபுரம், ஓட்டேரி, தியாகராய நகர் உஸ்மான் சாலை ஆகிய இடங்களில் மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
கணேசபுரத்தில் ரூ.142 கோடி செலவில் 680 மீட்டர் நீளம், 15.20 மீட்டர் அகலத்துக்கு நான்கு வழிச்சாலை மேம்பாலம் கட்டப்படவுள்ளது.
அதேபோல, ஓட்டேரியில் ரூ.62 கோடி செலவில் 508 மீட்டர் நீளம், 8.4 மீட்டர் அகலத்திற்கு இரண்டு வழிச்சாலை மேம்பாலமும் தி.நகர் உஸ்மான் சாலையில் 1,200 மீட்டர் நீளம், 8.4 மீட்டர் அகலத்திற்கு இரண்டு வழிச்சாலை மேம்பாலமும் அமைக்கப்படவுள்ளது.
மேம்பால கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்க அவை எந்த அளவுக்கு உதவும் என்பது மேம்பாலங்கள் பயன்பாட்டுக்கு வந்த பின்னரே தெரியவரும்.
சென்னையில் நாளுக்கு நாள் போக்குவரத்து அதிகரித்து வருகிறது. சாலைகளில் தினமும் 10 லட்சம் கார்கள், 40 லட்சம் இருசக்கர வாகனங்கள் செல்கின்றன.


