சிவகங்கை: சிங்கம்புணரி அருகே இயந்திர அறையோடு கிணற்றுக்குள் புதைந்த அஞ்சலை, 42, என்ற பெண்ணின் உடலை பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு மீட்புப்படையினர் மீட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் வசித்து வருகிறார் ராசு. இவரது மனைவி அஞ்சலை, கடந்த ஞாயிறன்று அருகே இருந்த தோட்டத்தில் கூலி வேலைக்குச் சென்றுள்ளார். ஆனால், இரவு நேரமாகியும் வீடு திரும்பாததால் அஞ்சலையைத் தேடி ராசு தோட்டம் உள்ள இடத்திற்குச் சென்றார்.
அங்கு கிணற்றோரம் இருந்த இயந்திர அறை இடிந்து கிணற்றுக்குள் விழுந்திருந்தது.
கிணற்றுமேட்டில் அஞ்சலையின் சாப்பாட்டுப் பையும் இருந்தது.
இைதயடுத்து, அஞ்சலை கிணற்றுக்குள் புதைந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் ராசு தீயணைப்புத்துறைக்குத் தகவல் கூறினார்.
தண்ணீரை வெளியேற்றி மண்ணை அகற்றும் பணியில் தீயணைப்பு வீரர்களும் காவல்துறையினரும் ஈடுபட்டனர். பல மணி நேரம் கழித்து மண்ணுக்குள் இருந்து அஞ்சலையின் கை மட்டும் வெளியே தெரிந்தது. 24 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு அஞ்சலையின் உடலை நேற்று காலை மீட்புப்படையினர் மீட்டனர்.

