பெங்களூரு: இந்தியாவின் முப் படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் மரணமடைந்த ஹெலிகாப்டர் விபத்தில் கேப்டன் வருண் சிங் மட்டும் படுகாயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டார்.
ராணுவ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று அவர் உயிரிழந்தார்.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் இம்மாதம் 8ஆம் தேதி நிகழ்ந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் பயணம் செய்த 14 பேரில் முப் படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் அவரது மனைவி உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.
இதில் விமானப்படை குரூப் கேப்டன் வருண் சிங் மட்டும் 80 விழுக்காடு படுகாயத்துடன் மீட்கப் பட்டு குன்னூர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் பெங்களூரு ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
ஆனால் சிகிச்சை பலனின்றி வருண் சிங் நேற்று காலமானார்.
இதன்மூலம் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 14 பேரும் உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஏர் மார்ஷல் மானவேந்திர சிங் 4 நாட்கள் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். தொடர்ந்து விபத்தில் மீட்கப்பட்ட தடயங்கள் கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஹெலிகாப்டர் விபத்தில் தடயங்கள் முக்கிய ஆதாரமாக கருதப் படுகிறது. ஹெலிகாப்டர் வால், முன்பகுதி, இறக்கை போன்ற பாகங்கள் அங்கிருந்து கயிறு மூலம் எடுத்து ஒரு பகுதியில் வைக்கப்பட்டு உள்ளது. அந்தப் பாகங்கள் இருந்த பகுதியில் தடயங்கள் உள்ளதா என்று விமானப்படையினர் ஆய்வு செய்து சேகரித்து வருகின்றனர்.
விபத்து நடந்த பகுதிக்கு வெளிநபர்கள் செல்வதைத் தடுக்க ராணுவ பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் ஹெலிகாப்டர் விபத்தின் போது மீட்புப் பணிகளுக்கு உதவிய நஞ்சப்ப சத்திர கிராம மக்களின் சேவை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதை யடுத்து அந்த கிராமத்தை ராணுவம் தத்தெடுத்து உள்ளது.

