சென்னை: ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட தங்கம், வெள்ளி நகை களின் தரத்தில் சந்தேகம் இருந்தால் உடனடியாக புகார் அளிக்கலாம் என்று இந்திய தர நிர்ணய ஆணையம் தெரிவித்தது.
இந்திய தர நிர்ணய ஆணையத்தின் தெற்கு மண்டல துணை இயக்குநரான அஜய் கண்ணா வெளியிட்ட அறிக்கையில் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
"தங்க நகைகள் மற்றும் கலைப்பொருள்களுக்கு 'ஹால்மார்க்' தரம் கட்டாயம். தங்க நகைகள் மீதான துாய்மையை மதிப்பீடு செய்ய ஹால்மார்க் தர ஆய்வு மையங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அந்த ஆய்வு மையங்கள் நகைகள், கலைப்பொருள்கள் மீதான ஹால்மார்க் தரத்தை ஆய்வு செய்து சான்றளிக்கின்றன. வெள்ளிப் பொருள்களுக்கும் ஹால் மார்க் அங்கீகாரம் வழங்கப்படுகிறது. ஆனால் கட்டாயம் ஆக்கப்படவில்லை," என்றது அறிக்கை.
அண்மையில் ஒரு நகை கடையில் வாங்கிய வெள்ளிப் பொருள்கள் மீதான ஹால்மார்க் தரத்தில் சந்தேகம் இருந்ததால் ஹால்மார்க் மையத்தில் அந்தப் பொருள்களை கொடுத்து, ஒரு வாடிக்கையாளர் பரிசோதித்து உள்ளார். இதில், ஹால்மார்க் தரம் குறைந்துள்ளது தெரியவந்தது.
இது குறித்து அந்த வாடிக்கையாளர் புகார் அளித்ததால் அந்த ஹால்மார்க் சான்றிதழ் வழங்கும் மைய உரிமம் ரத்து செய்யப்பட்டது" என்று அறிக்கை கூறியது.
இந்திய தர நிர்ணய ஆணையம், தெற்கு மண்டல அலுவலகம், 4வது குறுக்கு சாலை, சிஐடி வளாகம், தரமணி, சென்னை என்ற முகவரியிலும் புகார் தெரிவிக்கலாம் எனத் தெரிக்கப்பட்டது.

