ஆவடி: மேட்ரிமோனி திருமண இணையத்தளம் மூலம் 'மணமகள் தேவை' என பதிவு செய்து, ஒரு குடும்பமே பெண்களின் நகை, பணத்தைச் சுருட்டும் வேலையில் ஈடுபட்டு வருவதாக நித்தியலட்சுமி என்பவர் ஆவடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
"இனியும் பெண்களின் வாழ்க்கை என் கணவராலும் அவரது குடும்பத்தினராலும் பாதிக்கப்படக் கூடாது. நான் வரதட்சணையாகக் கொடுத்த 15 சவரன் நகை, ஒரு லட்சம் ரூபாய் பணத்தை காவல்துறை அதிகாரிகள் மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனவும் நித்தியலட்சுமி தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆவடி அருகே வசித்து வரும் நித்திய லட்சுமிக்கும், 34, கோயம்புத்தூரைச் சேர்ந்த விஜயகுமார், 37, என்பவருக்கும் கடந்த 2020 ஏப்ரல் மாதம் இருவீட்டார் சம்மதத்துடன் இரண்டாவது திருமணம் நடந்துள்ளது.
தற்போது இவர்களுக்கு 8 மாத ஆண் குழந்தையும் உள்ளது.
இந்நிலையில், விஜயகுமார் பணி நிமித்தமாக வெளியூர் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்ற நிலையில், கைபேசி மூலம் அவ்வப்போது வெவ்வேறு எண்களில் நித்தியலட்சுமியுடன் பேசி வந்துள்ளார்.
இதற்கிடையே, கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு நித்திய லட்சுமியை அழைத்துப் பேசிய நாதஸ்ரீ என்பவர், விஜயகுமாரை கடந்த அக்டோபர் மாதம் 24ஆம் தேதி திருமணம் செய்துகொண்டதாகக் கூறியுள்ளார்.
அத்துடன், தற்போது அவர் தன்னை ஏமாற்றிவிட்டு மற்றொரு பெண்ணுடன் சென்றுவிட்டதாகவும் கூறியுள்ளார். இதுதொடர்பான திருமண பத்திரிகை, புகைப்படத்தையும் நித்திய லட்சுமிக்கு 'வாட்ஸ்ஆப்' மூலம் அவர் அனுப்பியுள்ளார்.
விஜயகுமார் திருமணமானதை மறைத்து மேட்ரிமோனியில் மணமகள் தேவை என பதிவு செய்து 10க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றியது தெரியவந்தது.
பணம், நகையை அபகரிக்க மீண்டும் மேட்ரிமோனியில் மணமகள் தேவை என்ற போர்வையில் விஜயகுமார், அவரது தங்கை ரேவதி, அப்பா சக்திவேல், அம்மா அம்சவேணி ஆகியோர் கூட்டாக ஏமாற்றி வருவதாக நித்தியலட்சுமி புகார் தெரிவித்துள்ளார்.

